பக்கம் எண் :

698 திருமுறைத்தலங்கள்


     இத்தலத்தில் விசேஷமானது. மீனாட்சி சுந்தரரேஸ்வரர், சுப்பிரமணியர்,
கஜலட்சுமி, வல்லபை கணபதி, சூரியன் சந்நிதிகளும் உள்ளன.

     முன்மண்டபத்தில் தலப்பதிகக் கல்வெட்டுள்ளது. நேரே மூலவர்
தரிசனம். வலப்பால் உற்சவ மூர்த்தங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
இடப்பால் நடராசசபை உள்ளது. இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள
‘மயிலேறுபுரம்’ கிராமத்தில் நிலத்தை உழுத போது கண்டெடுக்கப்பட்டுள்ள
பழைமையான நடராசர், சிவகாமி, மாணிக்கவாசகர் ஆகிய மூன்று
மூர்த்தங்களே சபையில் வைக்கப்பட்டுள்ளவை. மற்றொரு நடராசர், சிவகாமி,
மாணிக்கவாசகர் வெளியில் வைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின்
கற்றூண்களின் அமைப்பு நோக்குவோர்க்கு வியப்பைத் தரும்.

     மூலவர் நாகாபரணத்துடன் பொலிவுடன் திகழ்கின்றார். திருமேனி
பளபளப்பாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன கணபதி,
தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சண்டேசுவரர்
சந்நிதி உள்ளது. தேனாம்பாள் அம்பிகை சந்நிதி அழகாகவுள்ளது. கிழக்கு
பார்த்த சந்நிதி. நின்ற திருக்கோலம். வெளியே வலப்பால் பள்ளியறை
உள்ளது.

     கோயில் நன்கு பராமரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தை மாதத்தில்
கடைசி வெள்ளிக்கிழமையில் திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. இதற்கான
குத்துவிளக்குகள் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. சிவராத்திரி, கார்த்திகைச்
சோமவாரங்களில் சங்காபிஷேகம், ஆதிரை, ஆனித் திருமஞ்சனம், பங்குனி
உத்திரம் முதலிய உற்சவங்களும், மாதாந்திர உற்சவக் கட்டளைகளும்,
வைகாசியில் பெருவிழா மூன்று நாள் விழாவாகவும் நடைபெறுகின்றன.
தலவரலாறு உள்ளது. நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

     இத்தலத்திற்குப் பக்கத்தில் திருக்களர், திருவெண்டுறை முதலிய
திருமுறைத் தலங்கள் உள்ளன.

    
 “நீலமார் தரு கண்டனே நெற்றியோர் கண்ணனே
          ஒற்றை விடைச்
     சூலமார் தரு கையனே துன்றுபைம் பொழில்கள்
          சூழ்ந்தழகாய
     கோலமா மலர் மணங்கமழ் கோட்டூர் நற்கொழுந்தே
          என்றெழுவார்கன்
     சாலநீடல மதனிடைப் புகழ் மிகத் தாங்குவர்
          பாங்காலே.”         (சம்பந்தர்)