232/115. திருக்கொள்ளிக் காடு கள்ளிக்காடு | சோழ நாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் வழக்கில் ‘கள்ளிக்காடு’ என்றும் வழங்குகிறது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மெயின்ரோடில், ‘நெல்லிக்கா’ என்று கைகாட்டி உள்ள திசையில் திரும்பி, ‘திருநெல்லிக்கா’ சென்று, அங்கிருந்து அருகாமையிலுள்ள ‘தெங்கூர்’ சென்று, அங்கிருந்து ‘கொள்ளிக்காடு’ செல்லும் பாதையில் 5 கி.மீ. சென்று, கீராலத்தூர் என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து மேலும் சென்றால் சாலையோரத்தில் தாமரைக்குளமும் அதையொட்டிக் கோயிலும் இருப்பதைக் காணலாம். நல்ல தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. பஸ், கார், வேன் கோயிலுக்குச் செல்ல வசதியுள்ளது. கோயில் வரை மினிபஸ் போகிறது. கோயிலைச் சுற்றிச் சில வீடுகளே உள்ளன. கொள்ளி - நெருப்பு. அக்கினி வழிபட்ட தலமாதலின் கொள்ளிக்காடு என்று பெயர் பெற்றது. சோழ மன்னன் ஒருவனுக்குச் சனிதோஷம் விலகிய தலம். ஆதலின் இங்குச் சனிபகவான் சந்நிதி விசேஷமானது. நகரத்தார் திருப்பணியைப் பெற்றுள்ள கோயில். கோயில் நல்ல நிலையில் உள்ளது. இத்தலத் தேவாரத்தில் இறைவன் யானையை உரித்த செயல் குறிப்பிடப்படுவதால் மக்கள் ஒருகாலத்தில் இக்கோயிலை ‘கரியுரித்த நாயனார் கோயில்’ என்றும் அழைத்து வந்ததாகத் தெரிகிறது. இறைவன் - அக்கினீஸ்வரர் இறைவி - மிருதுபாதநாயகி, பஞ்சின் மெல்லடியம்மை. தலமரம் - வன்னி, கோயிலுக்கு எதிரில் உள்ளது. தீர்த்தம் - தீர்த்தக்குளம், கோயிலின் பக்கத்தில் உள்ளது. சம்பந்தர் பாடியது. |