பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 749


     தீர்த்தம் - சரவணப் பொய்கை, இலட்சுமி தீர்த்தம், பிரமகூபம்

     சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடல் பெற்றது.

     ஆறுமுகர் சந்நிதி மிகவும் விசேஷமானது. மூலவர் தெய்வயானை
திருமணக் கோலத்துடன் முருகன் காட்சியளிக்கின்றார். பரங்கிரி நாதர் -
மூலத்திருமேனி - சிவலிங்கம் குடவரைக் கோயிலில் தரிசனம் தருகின்றார்.
பின்னால் கல்யாண சுந்தரேஸ்வரர் வடிவம் புடைப்புச் சிற்பமாகவுள்ளது.

     இத்தலத்தில் முருகப் பெருமானின் (ஞான) வேலுக்குப் பாலபிஷேகம்
செய்வது தனிச்சிறப்பானது. கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
நாடொறும் ஆறுகால பூசைகள் நடைபெறுகின்றன.

     ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீ
ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் அருள் முன்னிலையில் 11.6.2000
அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

     தலபுராணம் உள்ளது - நிரம்ப அழகிய தேசிகர் பாடியது.

     இத்தலத்தில் 11 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. முகமதியர் ஆட்சியில்
திவானாக இருந்த ராஜகோபாலராயர் என்பவர் - ஐரோப்பியர் படைகள்
மதுரையில் புகுந்து கோயிலை அழித்துக் கொண்டு வந்தபோது அவர்களை
எதிர்த்து வயிராவி முத்துக் கருப்பன் குமரன் செட்டி என்பவன் தடுத்து
அப்பணியில் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட, அவன்
குடும்பத்தாருக்கு இறையிலியாக நிலங்கள் அளித்த செய்தி இத்தலத்தின்
கல்வெட்டு ஒன்றின் மூலம் தெரியவருகிறது.

     “பொன்னியல் கொன்றை பொறிகிளர் நாகம் புரிசடைத்
     துன்னிய சோதியாகிய ஈசன் தொன்மறை
     பன்னிய பாடல் ஆடலன்மேய பரங்குன்றை
     உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே”.
                                          (சம்பந்தர்)
     “பாரொடு விண்ணும் பகலுமாகிப்
         பனிமால் வரையாகிப் பரவையாகி
     நீரோடும் தீயு(ம்) நெடுங்காற்றுமாகி
          நெடு வெள்ளிடையாகி நிலனுமாகித்
     தோரோட வரையெடுத்த அரக்கன்
          சிரம்பத்து இறுத்தீர்உம செய்கையெல்லாம்
     ஆரோடும் கூடா அடிகேள் இது என்
         அடியோமுக்கு ஆட்செய அஞ்சுதுமே”    (சுந்தரர்)