மூலத்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை. அதில் வட்டமான பீடம் - இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுர மர்த்தினி சந்நிதிகள். விநாயகர், யானைமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களோடு நின்ற கோலத்தில் “துவிபுஜ” விநாயகராகக் காட்சி தருகின்றார். இவர்முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இஃது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்பர். கோயில் மதிலுக்கு வெளியே வடபால் தரைமட்டத்தின்கீழ் தண்ணீரில் பெரிய சிவலிங்கவடிவில் ஆதிகோகர்ணேஸ்வரர் காட்சி தருகிறார். இத்தலத்தில் உள்ள கோகர்ப்பக்குகை கண்டுகளிக்கத்தக்கது. இங்கு 33 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் கோகர்ண தீர்த்தம், தாம்ர கௌரிநதி, கோடி தீர்த்தம், பிரமகுண்ட தீர்த்தம் முதலியவை சிறப்புடையன. இவற்றுள்ளும் கோடி தீர்த்தம் மிக்க சிறப்புடையது. இத்தலவரலாறு வருமாறு :- இலங்கை வேந்தன் இராவணன் கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். சிவபிரான் உமையம்மையோடு காட்சியளித்து வேண்டும் வரம் யாதென வினவினார். இராவணன் இலங்கை அழியாதிருக்க அருளவேண்டும் என்றான். அதற்கிசைந்த பெருமான் இராவணன் கையில் பிராண லிங்கத்தைக் கொடுத்து இதனை இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது. இச்சிவலிங்கத்தை தலையில் சுமந்து செல்ல வேண்டும். வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது என அருளி மறைந்தார். இராவணன் பிராணலிங்கத்தைச் சிரசில் சுமந்து இலங்கை நோக்கிச் சென்றான். நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் பிராண லிங்கத்தை இராவணன் எடுத்துக்கொண்டு சென்று பிரதிட்டை செய்தால் இராவணன் அழியான், தேவர்கள் துயர்நீங்காது என எண்ணித் தேவர்கள் புடைசூழக் கயிலைமலை சென்று விநாயகரை வேண்டினான். இந்திரனின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர் இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் வயிற்றில் நீர்சுரக்குமாறு செய்ய |