(8) சுண்ணாம்புக்குழி (9) குருகைபாலப்பன் கோயில் முதலிய சிற்றூர்கள் ஆகும். சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே ‘மாளிகைமேடு’ ஆகும். இவ்வூர் பண்டை நாளில் புலவர்களால் கங்காபுரி, கங்கைமாநகர், கங்காபுரம் என்றெல்லாம் புகழப்பட்டது. முதலாம் இராசேந்திரன் முதல் மூன்றாம் இராசேந்திர சோழன் காலம் வரை இவ்வூர் சோழர் தலைநகராகத் திகழ்ந்தது. தன் தந்தையைப்போல அதற்கீடாக மிகச்சிறப்புடன் ஆண்டவன் முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044) கங்கைகொண்டான், பண்டிதசோழன் முதலிய பட்டப் பெயர்களையுடையவன். இவனுடைய மகள் அம்மங்காதேவி. லட்சத்தீவையும் வென்ற சிறப்புடையவன். சோழர் தலைநகரான தஞ்சை, பாண்டியநாட்டு எல்லைக்கு அருகில் இருந்தமையால் அடிக்கடி போர் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. தவிர, காலந்தவறாது பெய்த மழையால் கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கேற்பட்டு, அதனால் தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானைக் காணவிரும்பியபோதெல்லாம் தடையும் உண்டாவதைக் கண்ட முதலாம் இராசேந்திர சோழன், சோழநாட்டின் மையப்பகுதியில் புதிய தலைநகரம் ஒன்றை அமைப்பதற்கு எண்ணினான்; முயன்றான். இடத்தைத் தேர்வு செய்து புதிய நகரத்தை நிர்மாணித்து அதை கங்கை நீரால் புனிதப்படுத்த எண்ணித் தன்படையை கங்கை நீர் கொண்டு வர வடநாட்டிற்கு அனுப்பி வைத்தான். அப்படையும் சென்று, வடநாட்டு மன்னர்களை வென்று கங்கை நீர் கொண்டு திரும்பியது. இதனால் முதலாம் இராசேந்திர சோழனுக்குக் கங்கை கொண்டான்- கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்நீரால் புனிதப்படுத்தி அவ்வூரில் தன்தந்தை, தஞ்சையிற் கட்டியது போலவே ஒரு பெரிய கோயிலைக் கட்டினான். அதுவே கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகும். அவ்விடமே கங்கை கொண்ட சோழபுரம். இவ்வூரை நிறுவ சுண்ணாம்பினைத் தயாரித்த இடம் சுண்ணாம்புக்குழி என்றும், கோட்டை இருந்த பகுதி (உள்கோட்டை) உக்கோட்டை என்றும், ஆயுதச்சாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்றும் இன்றும் வழங்குகின்றன. இவ்வூருக்காகக் கட்டுவித்த ஏரி சோழகங்கம் எனப்பட்டது. இக்கங்கை கொண்ட சோழபுரம் அக்காலத்து பற்பலச் சிறப்புக்களுடன் விளங்கியது. சயங்கொண்டார் ஒட்டக்கூத்தர் முதலிய பெருமக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள். கலிங்கத்துப்பரணி இங்கிருந்து பாடப்பட்டது. விக்ரம சோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் |