பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 891


     நடராசர், சுகாசனர், சண்டேச அநுக்ரஹர், கஜசம்ஹாரர்,
ஞானசரஸ்வதி முதலிய அருமையான சிற்பமூர்த்தங்களைக் கண்களுக்கு
விருந்தாகக் கண்டு மகிழலாம். சண்டேசுவரர் கோயில் தனியே உள்ளது.
பக்கத்தில் புன்னை மரம் நிழல்தந்து வருபவர்களைக் காக்கிறது.

     கண்டு மகிழத்தக்க கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பங்களை
விட்டுப் பிரியவே மனம் வரவில்லை. அரிய சிற்பக் களஞ்சியம் அழகிழந்து
நின்று அருமையை பறைசாற்றுகின்றது.

     இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் மூலம்; ஊர்ப்பெயர்
வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு மண்ணை கொண்ட
சோழவள நாட்டு கங்கை கொண்ட சோழபுரம் என்றும்; இறைவன் பெயர்
திருப்புலீஸ்வரமுடையார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.
மேலும் சிவபெருமானுக்கு அளிக்கப்பட்ட நிலத்துக்குத் திருநாமத்துக்காணி
என்றும், திருமாலுக்கு அளிக்கப்பட்டது திருவிடையாட்டம் என்றும் பெயர்
வழங்கப் பெற்றன என்ற செய்தியும் ; மன்னனார் என்பது - திருமாலுக்குப்
பெயர். அவர் எழுந்தருளிய காரணத்தால் அப்பதி மன்னனாகுடி என்று
பெயர் பெற்றது. அதுவே பிற்காலத்து மன்னார்குடி என்றாயிற்று. அதன்
பழம்பெயர் வீரநாராயண நல்லூர் என்பதே என்பன போன்ற பல செய்திகள்
இக்கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகின்றன.

     இத்திருக்கோயிற் பெருமானுக்கு இராசேந்திரன் கங்கை நீராட்டியதை
நினைவு கூறும் வகையில் 108 குடங்கள் கங்கை நீரால் அபிஷேகம் 1985,
1986ஆம் ஆண்டுகளில் செய்வித்து, அது முதல் ஆண்டுதோறும் சுவாமிக்கு
ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்வதற்கும், ஸ்ரீகாஞ்சிகாமகோடி
பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (ஸ்ரீ
பரமசார்யாள்) அவர்கள் ஏற்பாடு செய்து அதற்கெனக் கமிட்டி ஒன்றையும்
ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்கள் அன்னாபிஷேகத்தை (பல மூட்டைகள்
அரிசி சேகரம் செய்து) சிறப்பாக ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.

     “அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே
          அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
     சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும்
          தொண்டருக்கு எண்டிசைக் கனகம்
     பற்பதக் குவையும் பைம்பொன் மாளிகையும்
          பவளவாயவர் பணைமுலையும்
     கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை
          கொண்ட சோளேச் சரத்தானே”.