பக்கம் எண் :

902 திருமுறைத்தலங்கள்


     மூலவருக்கு முன்னால் வாயிலில் துவாரபாலகர்கள் உள்ளனர். சற்று
உயர்வான ஆவுடையாரில் சற்றே குட்டையான பாணவடிவில் சுந்தரேஸ்வரர்
தரிசனம் தருகின்றார். அம்பாள் அழகிய கோலம்.

     மூலவருக்கு முன் உள்ள மண்டபத்தில் வலப்பால் ஆலிங்கனமூர்த்தி
சிலாரூபத்தில் அருமையாகக் காட்சியளிக்கிறார். தோள்மேல் கைபோட்டு
அம்பாளை அணைத்திருக்கும் லாவகமே தனியழகு - கண்டு மகிழ வேண்டும்.
அதற்கு நேர் எதிரில் இடப்பால்,

     ரிஷபத்தின் மீது (ரிஷபாரூடராக) சுவாமியும் அம்பாளும்
வீற்றிருக்கும் அற்புதமான சிலாரூபம் - ஒரே கல்லில் செதுக்கப்பட்டு
அதிசய அமைப்பு உடையதாகக் காட்சியளிக்கிறது. பின்புறத்தில் லிங்க
வடிவமும் செதுக்கப்பட்டு உள்ளது. வியப்பூட்டும் இப்புதுமையான
சிலாரூபம் வேறெங்கும் காண முடியாதது.

     கல்வெட்டில் இத்தலம் விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு
தைலோக்கி ஆகிய சதுர்வேதி மங்கலம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

     குருக்கள் வீடு கோயிலுக்கு முன் பக்கத்திலேயே உள்ளது.

     கருவூர்த் தேவர் பாடியுள்ள இத்தலத்து திருவிசைப்பா பதிகத்தில்
முதலிரு பாடல்கள் தலைவிகூற்றாகவும் ஏனையவை தோழி தலைவனிடம்
கூறும் கூற்றாகவும் அமைந்துள்ளன.

    
 “நையாத மனத்தினனை நைவிப்பாள் இத்தெருவே
     ஐயா ! நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை
     கையாரத் தொழுது அருவி கண்ணாரச் சொரிந்தாலும்
     செய்யாயோ? அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.”

     “ஆரணத்தேன் பருகி அருந் தமிழ்மாலை கமழவருங்
     காரணத்தின் நிலை பெற்ற கருவூரன் தமிழ்மாலை
     பூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம்
     சீரணைந்த பொழிற் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.”

அஞ்சல் முகவரி :-

     அ/மி. சுந்தரேசுவரர் திருக்கோயில்
     திருலோக்கி - அஞ்சல்
     (வழி) துகிலி - S.O. 609 804.
     திருவிடை மருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம்.