சாட்டியம் (ஜாட்டியம்) ; வெப்ப மிகுதியால் வரும் சுரநோய். வெப்ப நோய்க்குரிய தேவதையாகிய ஜ்வரதேவதை இறைவனை வழிபட்ட தலமாதலின் ஜாட்டியக்குடி (சாட்டியக்குடி) என்று பெயர் வந்தது. (குடி-ஊர்) வெப்ப நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இன்றும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுக் குணமடைவது வழக்கில் இருந்து வருகிறது. சாட்டிய (சாண்டில்ய) முனிவர் வழிபட்ட தலமென்றும் சொல்லப்படுகிறது. கோயில் பிராகாரத்தில் இம்முனிவரின் சிலாரூப மேனியும் உள்ளது. கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பாடல் பெற்றது. இறைவன் - வேதநாதர், வேதபுரீஸ்வரர், ரிக்வேதநாதர் இறைவி - வேதநாயகி தீர்த்தம் - வேத தீர்த்தம் தலமரம் - வன்னி மேற்கு நோக்கிய சந்நிதி. முன் வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பால் வசந்த மண்டபம் உள்ளது. நேரே சென்று 3 நிலைகளையுடைய உள் கோபுரத்தைத் தாண்டினால் நீர்கட்டும் அமைப்பிலுள்ள நந்தியையும் பலி பீடத்தையும் கண்டு தொழலாம். அடுத்துள்ள வாயிலைக் கடந்து இடப்பால் பிராகாரத்தில் திரும்பினால் விசுவநாத லிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராச சபை, நவக்கிரகங்கள், சனிபகவான், பைரவர், சாண்டில்ய முனிவர், கருவூர்த் தேவர், சம்பந்தர், அப்பர், குபேரன், விநாயகர், சூரியன் முதலிய சந்நிதிகளைத் தொழலாம். தலமரம் - வன்னி, பிராகாரத்தைத் தொடர்ந்து வந்தால் விநாயகர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் காட்சி தரும். வலம் முடித்து வாயிலைத் தாண்டி உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம் கிடைக்கிறது. மூலமூர்த்தி - சிவலிங்கத் திருமேனி. சற்று உயர்ந்த பாணம். சதுர ஆவுடையார் அமைப்பு. உள்மண்டபத்தில் இடப்பால் உற்சவ மூர்த்தங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இம்மூர்த்தங்களுள் சோமாஸ்கந்தர், நடராசர், விநாயகர், வள்ளி தெய்வயானை, முருகன், பிரதோஷ நாயகர், திரிபுரசம்ஹாரர், சூரியன், உஷா, பிரத்யுஷா, சண்டேஸ்வரர் முதலியவை இடம் பெறுகின்றன. |