பக்கம் எண் :

1

இரக்ஷணிய யாத்திரிகம்

சிறப்புப் பாயிரம்

கடவுள் வாழ்த்து

பூதபௌ திகங்க ளாய புவனகோ சரங்கட் கெல்லாம்
ஆதியாய் முதுமூ லத்துக் கநாதியா யகண்டா கார
ஜோதியாய் விளங்கி நிற்குந் தூயசை தந்ய வாழ்வைக்
காதலாய்ப் பரவி நாளுங் கருத்தினுள் ளிருத்தி வாழ்வாம். 1

(பொழிப்புரை) நிலம், நீர், தீ, வளி, வெளி என்னும்
பஞ்சபூதங்களாலும் அவை பரிணமித்தலால் ஆகிய பௌதிகங்களாலும்
உண்டாகிய புவன மண்டலங்களுக்கெல்லாம் ஆதியாய், மூலப்ரகிருதிக்கு
முந்தியதாய், அளவிடற்கரிய ஜோதியாய்ப் பிரகாசித்து நிற்கின்ற பரிசுத்த
சித்ரூப வாழ்வாகிய சர்வேஸ்வரனை அன்போடு துதித்து எப்போதும் நமது
கருத்தினுள் இருத்தி வாழ்வோமாக.
(விரிவுரை) பூதம் பஞ்சபூதங்கள்.அவற்றைப் பிருதுவி, அப்பு,
தேயு, வாயு, ஆகாசம் என்பர் வடநூலார். பூதங்களாலாகியது பௌதிகம்.
கடவுளது ஆதியாந்தன்மையையும் அநாதியாந்தன்மையையும் முதல்
இரண்டடிகளிற் கூறினார். முதுமூலம் என்பது குடம் வனைதற்குக் களிமண்
காரணமாயிருத்தல்போல இவ்வுலகங்களெல்லாம் உண்டாவதற்குக்
காரணமாயிருந்த வஸ்து. இதை மூலப்ரகிருதியென்றும், மாயையென்றும்
பிறர் கூறுவர். சைதந்நியமென்பது சித்தென்பதினடியாய்ப் பிறந்த தத்திதாந்த
நாமம். ஒரு சமஸ்கிருத பதம் சிறிது மாறி தன்னோடு இயைபுடைய
பொருளை யுணர்த்துவது தத்திதாந்தம். கடவுள் வணக்கத்துள்
அடியவரிடத்துள்ள அன்பே பிரதானமென்பது தோன்ற 'காதலாய்ப் பரவி'
என்றார். இப்பாட்டும் இதற்கடுத்த பாட்டும் அறுசீர் ஆசிரியவிருத்தங்கள்.
இதற்கு வாய்பாடு : - விளம் - மா - தேமா - விளம் - மா - தேமா.

ஒன்றிலே மூன்றாய் மூன்று மொன்றதா யுலப்பி லாதாய்
நின்றுல கனைத்துந் தூய நினைவுமாத் திரையிற் றந்து
நன்றென வுவந்தி ரக்ஷை நல்குமெய்ஞ் ஞானா னந்தக்
குன்றினை யகத்துத் தாங்கிச் சிந்தனை கூடி வாழ்வாம். 2

(பொ - ரை) ஒன்றிலே பிதா, குமாரன், பரிசுத்தாவியென்னும்
மூன்றுமாய், அம்மூன்றும் திரியேகமென்னும் ஒன்றாய், அழிவில்லாத தாய்,
நிலைபெற்று, உலகங்களனைத்தையும் தாம் நினைத்தமாத்திரத்தி
லுண்டாக்கி, சிருஷ்டிப்பு நன்றென மகிழ்ந்து, உலகத்திற்கு இரட்சிப்பை
அருளுகின்ற சத்தியமும்