பக்கம் எண் :

10

முதலாவது : ஆதிபருவம்
 

1. வரலாற்றுப் படலம்
 

 
    உலகம் யாவும் புரந்தரு ளுன்னதர்
அலகில் ஜோதி யருட்கட லாரணத்
திலகு மெய்த்திரி யேகர் பதத்துணை
குலவி யென்னெஞ் சிடங்குடி கொண்டவே. 1

     (பொ - ரை) சர்வ லோகங்களையும் இரட்சித்தருளுகின்ற உன்னதர்
அளவில்லாத ஜோதி, அருட்கடல், வேதத்திலே விளங்குகின்ற மெய்யான
திரியேகர். அவரது திருப்பாதமிரண்டும் என் இருதயத்தில் பொருந்திக்
குடிகொண்டிருக்கின்றன. (ஆதலின் யான் எடுத்துக்கொண்ட காரியம்
இனிது முடியும் என்றபடி.)

 
    மைக்க டற்புவிக் கெத்துணை வான்கதிர்
தக்க தத்துணைச் சால்புடைத் துத்தம
மெய்க் கிறிஸ்தவ வேதியர் தாங்குழீஇத்
தொக்க தாயமெய்த் தூய திருச்சபை. 2

     (பொ - ரை) உத்தம மெய்க்கிறிஸ்தவர்களாகிய வேதியர்
கூடுவதாலாகிய மெய்யான தூய திருச்சபையானது, வானத்தில்
விளங்குகின்ற சூரியன் கரிய கடலாற் சூழப்பட்ட பூலோகத்துக்கு
எவ்வளவு தகுந்ததோ அவ்வளவு தகுதியுடையது.

 
    மலையுற் றோங்கு சுடரினிவ் வையகத்
தலையுற் றான்ம விரக்ஷை தயங்கிடக்
கலையுற் றோங்கு கதிர்மதி யிற்சபை
நிலையுற் றோங்கிப் பெருகி நிலாவுமே. 3

     (பொ - ரை) மலைமேல் பொருந்தி உயர்ந்து பிரகாசிக்கின்ற
சுடரைப் போல இவ்வுலகத்தில் ஆன்ம இரட்சிப்பு விளங்கத்தக்கதாக,
கலைகளைப் பெற்று வளருகின்ற கதிர்களையுடைய சந்திரனைப்போல
திருச்சபையானது நிலைபெற்று ஆன்ம அனுபவத்தில் வளர்ந்து
விருத்தியாகி எங்கும் விளங்கும்.

 
    சென்னி தேவ குமாரன் திருச்சபைக்
கிந்நி லத்திருத் தொண்டரெல் லாமுடல்
அன்ன வாப்பரி சுத்த வயிக்கியம்
மன்னி நின்று வளர்க்குந் தருமமே. 4