பக்கம் எண் :

13

2. மெய்யுணர்ச்சிப் படலம்
 
   

வஞ்சமே பயில் ப்ரபஞ்ச வனத்திலே நெடுநா ளாகச்
சஞ்சரித் திடும்போ தாண்டோர் தடமலைச் சாரல் வைகி
நெஞ்சுளே நிமலன் பாத நிறுவிநித் திரிக்குங் காலை
விஞ்சியோர் கனவு கண்ட விதந்தனைப் பகரு வேனே. 1

     (பொ - ரை) வஞ்சகத்தையே பயிற்சிசெய்யும் பிரபஞ்சமாகிய
வனத்திலே நெடுநாளாகச் சஞ்சரித்திடுகின்ற காலத்து அங்கே ஒரு
விசாலமான மலைச்சாரலில் தங்கிப் பரிசுத்தராகிய கடவுளுடைய
பாதத்தை நெஞ்சிலே நிறுத்தி நித்திரை செய்யும்போது, பக்தி மிகுந்து
கனவுகண்ட விதத்தைச் சொல்லுவேன்.

 
    வண்டினம் பயிலச் செய்ய மலர்முகை யவிழ்ந்து செந்தேன்
ஒண்டுளி பிலிற்றி யெங்கு முறுமணங் கமழ வோங்குந்
தண்டலைப் பரப்பி னூடே தனித்தொரு மனித னிற்கக்
கண்டனன் கனவி லன்னோ னிலையிது கழறுங் காலை.
2

     (பொ - ரை) வண்டுக் கூட்டங்களானவை ரீங்காரஞ்
செய்துகொண்டிருக்கவும், செவ்விய மலர்மொட்டுகளானவை அவிழ்ந்து
சிவந்த தேன் துளிகளைத் தூற்றி எவ்விடத்தும் நல்லவாசனை
வீசிக்கொண்டிருக்கவும், இவ்வாறு சிறப்புற்ற ஓர் சோலையினூடே ஒரு
மனிதன் தனித்திருக்க கனவிற்கண்டனன். பேசுமிடத்து அவனுடைய
நிலை கீழ்வருவதாகும்.

 
    வாடிய முகத்தன் சென்னி வணக்கியோன் மலங்கி வார்நீர்
ஓடிய விழியன் கந்தை யுடையின னொருங்கு பாவங்
கூடிய சும்மை தாங்கிக் கூனுறு முதுகன் பல்கால்
வீடிய னெறியைநாடும் விருப்பினன் வெருண்ட நெஞ்சன். 3

     (பொ - ரை) அவன் வாடிய முகத்தையுடையவன். வணங்கிய
தலையையுடையவன். கலங்கிக் கண்ணீர் ஒழுகிய கண்களையுடையவன்.
கந்தையுடையினன். பாவம் ஒன்றாய்க்கூடிய சுமையைத் தாங்கிக் கூன்பட்ட
முதுகினன். பலதரமும் மோக்ஷவீட்டின் நெறியைநாடும் விருப்பினன்.
வெருட்சிகொண்ட நெஞ்சையுடையவன்.

    கையுறு புத்த கத்தைக் கருத்துற விரித்து நோக்கி
மெய்யுற நடுங்கி விம்மி வேதனை பொறுக்க லாற்றா
தையகோ வையகோ வென் றலறிநெட் டுயிர்த்தி யாது
செய்யுறு கரும மென்று திகைத்துநின் றயரு நீரான். 4