பக்கம் எண் :

41

     (பொ - ரை) சிவந்த பொன்னினாலரக்கப்பட்ட பரிசுத்தமாகிய
திருமாளிகை ஒருகோடி சூரியர்கள் ஒருமிக்க உதித்த தன்மையைப்போல
பிரகாசிக்கும். இதுவே இரட்சண்ய வாசல். செம்மை விளங்குகின்ற
பரலோக ராஜ்ஜியத்து இளவரசனாகிய கிறிஸ்து வீற்றிருக்கின்ற
தெய்வவீடும் இதுவே. ஆராயுமிடத்து நம்மவர் யாவரும் ஒன்றுகூடி
நித்திய ஜீவானந்தத்தை அனுபவிக்கும் சபை இதுவே.

   

மருள்பழுத்த நரஜென்ம மாயவிடா யறத்தொலைத்து
     மறுமையாக்கி
அருள்பழுத்த குமரேசன் றிருமுகமண் டலச்சேவை
     யமுதையூட்டித்
தெருள்பழுத்துத் திகழ்நித்ய ஜீவமணி மௌலியைநஞ்
     சென்னிசூட்டிப்
பொருள்பழுத்த பெருஞ்செல்வத் தெமையிருத்தி வைக்கு
     மிந்தப் புனிதவீடு.                           41

     (பொ - ரை) மயக்கம் நிரம்பிய மானிட ஜென்மத்தின் மாயமாகிய
விடாயை முழுவதுமாகத் தொலைத்து, மறுமைப்பயனை உண்டாக்கித்
திருவருள் கனிந்த குமரேசனது திருச்சந்நிதானத்திலே செய்யும்
சேவையாகிய அமிர்தத்தை எமக்கு ஊட்டி, தெளிவையுண்டாக்கி,
பிரகாசிக்கின்ற நித்திய ஜீவரத்தினங்கள் இழைக்கப்பெற்ற கிரீடத்தை
எமது சிரசிற் சூட்டி, மிக்க விசேஷத்தையுடைய பெருஞ்செல்வத்தில்
எம்மை நிலையாக இருத்திவைக்கும் இந்தப் பரிசுத்தமாகிய வீடு.

   

எண்ணரிய பரலோகத் திளவரசன் பெருஞ்சீர்த்தி
     யீட்டமென்கோ
தண்ணளியன் பருளிரக்கந் தயையாதிக் குறையுளென்கோ
     தரணிக்கீட்டும்
புண்ணியமாம் ரக்ஷணியம் படிவமெடுத் துயர்ந்தோங்கு
     புதுமைத்தென்கோ
பண்ணவர்வாழ்த் தொலிமடுத்து நித்தியபே ரின்பநிறை
     பரமவீட்டை.                            42

     (பொ - ரை) அமரருடைய வாழ்த்துதலாகிய சப்தம் பொருந்தி
நித்தியமாகிய பேரின்பம் நிறைந்த இப்பரம வீட்டை எண்ணுதற்கும்
அரிய பரலோகத்து இளவரசனாகிய கிறிஸ்துவினது பெருங்கீர்த்தியின்
சம்பாத்தியம் என்று சொல்லுவேனோ! அவரது குளிர்ந்த கிருபை அன்பு
அருள் இரக்கம், தயை முதலிய குணங்களுக்கு உறைவிடம் என்று
சொல்லுவேனோ! உலகினர் பொருட்டு அவர் சம்பாதித்தருளிய
புண்ணியமாகிய ரட்சண்யமே ஓர் வடிவமெடுத்து உயர்ந்து ஓங்கிய ஒரு
புதுமையை உடையது என்று சொல்லுவேனோ! யாதென்றறியேன்!