முதற்பாகம்
286.
புகன்றநன்
மொழிகேட் டறப்பெரும் புதுமைப்
புதுமையீ தெனச்சிர மசைத்துன்
மகன்றனைத்
தருக வென்றலு மடமான்
மகிழ்வொடுந் திருமனை புகுந்து
மிகுந்தபே
ரொளிவு சொரிந்துகால் வீச
விளங்கிய முகம்மதை யெடுத்துச்
செகந்தனி
புரக்கு மப்துல்முத் தலிபு
செழுமணித் தடக்கையி லீய்ந்தார்.
121
(இ-ள்) அவ்வாறு ஆமினா அவர்கள் சொன்ன
நல்லவார்த்தைகளை அப்துல் முத்தலிபானவர்கள் காதாரக் கேள்வியுற்று, ஆமினாவே! இது அறவும்
பெரிய அற்புதம் அற்புதமென்று சிரக்கம்பஞ் செய்துக் கொண்டு உனது குமாரனை என்னிடத்தில்
தருவாயாகவென்று சொன்னமாத்திரத்தில், இளமானாகிய ஆமினா அவர்கள் மகிழ்ச்சியோடும் தங்களது
தெய்வீகம் பொருந்திய வீட்டினகம் பிரவேசித்து மிகுதியான பெரிய பிரபையைச் சொரிந்து
கால்வீசும்படி விளங்கிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் கைகளில் மெல்லத்
தூக்கி யெடுத்துப் பூலோகத்தை யொப்பறக் காக்கும் அப்துல் முத்தலிபு அவர்களினது செழுமையான
அழகிய பெருமைதங்கிய கைகளிற் கொடுத்தார்கள்.
287.
கறைநிணஞ்
சுமந்த செங்கதிர் வடிவேற்
கரதலன் அப்துல்முத் தலிபு
முறைமுறை
மோந்து முத்தமிட் டுவந்த
முழுமலர்ச் செழுமுக நோக்கி
நிறைமதி
நிகரா முகம்மது நயினார்
நிலவுகொப் பிளித்திடச் சிரிப்பக்
குறைபடா
வுவகைப் பெருக்கெடுத் தெறியக்
குளித்தக மிகமகிழ்ந் தெழுந்தார்.
122
(இ-ள்) சத்துராதிகளின் இரத்தக்
கறையையும் கொழுப்பையும் சுமந்து கொண்ட சிவந்த கிரணந்தங்கிய கூர்மையான வேலாயுதம்
பொருந்திய கைத்தலத்தையுடைய அப்துல் முத்தலிபவர்களினது வரிசை வரிசையாகத் தங்களை முகந்து
முத்தமிட்டுவப்பான முகத்தை பூரணப்பட்ட சந்திரனுமொப்பகாத முகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்லமென்னும் நபிகணாயகமவர்கள் பார்த்து நிலவைக் கக்கும்படி சிரித்தவுடன் குறைவுபடாத
உவகையானது பிரவாகமாய் அலைவீச அப்துல் முத்தலிபவர்கள் அதில் முழுகி மனமானது மிகமகிழ்வாய்
அம்முகம்மது நபியவர்களைத் தூக்கிக் கொண்டு எழுந்தார்கள்.
|