இரண்டாம் பாகம்
4132.
பத்தியொளிர் வெண்சுதை பரப்பியெழில் கொண்ட
பித்திகை தொறும்படை பிறங்கியனல் பெய்யும்
வித்தையினி யற்றுபொறி மேவியுய ரிஞ்சி
முத்திகை படுத்தினர் முகம்மதவ ணன்றே.
10
(இ-ள்) அவர்கள் அவ்வாறெரிக்க,
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் அவ்விடத்துள்ள வரிசையாய்ப் பிரகாசிக்கின்ற வெள்ளிய சுண்ணச் சாந்தை
பூசி அழகைக் கொண்ட சுவர்களெல்லாவற்றிலும் ஆயுதங்க ளானவை மின்னி நெருப்பைச் சிந்துகின்ற
தந்திரத்தினாற் செய்த எந்திரங்கள் பொருந்தி யோங்கா நிற்கும் அக்கோட்டையை முற்றிக்கை
யிட்டார்கள்.
4133.
ஓதவுண ரெண்ணிருபத் தோர்பக லடங்காச்
சூதருறை கின்றவெயிற் சுற்றினு மிருப்பப்
போதமன மஞ்சினர் நடுங்கினர் புலம்பி
வேதனை யுழன்றனர் மருண்டனர் வெகுண்டார்.
11
(இ-ள்) சொல்லும்படி
தெரிந்த கணக்கானது இருபத்தொரு நாளாகப் பணியாத சூதர்களான அந்தக் காபிர்கள் தங்கிய அந்தக்
கோட்டையினது சுற்றிலும் அவ்வாறு முற்றிக்கை போட்டுக் கொண்டிருக்க, அக்காபிர்கள் அறிவைப்
பொருந்திய தங்க ளிதயமானது பயங்கரமுறப் பெற்றுப் பதறிப் பிதற்றிக் கொண்டு துன்பத்தினா
லுலைந்து மயங்கிக் கோபமுற்றார்கள்.
4134.
மக்கநக ரத்தினுறை காபிரு மதீனா
மிக்கமுனா பிக்குகளு மேயிவர் தமக்குத்
தக்கதுணை யுற்றிலரெ னத்தனி சலித்தே
திக்கறிய வேகவுல் கொடுத்தனர் திறத்தோர்.
12
(இ-ள்) அவ்வாறு கோபமுற்ற
வலிமையை யுடையவர்களான அந்தச் சுகுறா நகரத்திலுள்ள காபிர்கள் திருமக்கமா நகரத்தில் தங்கிய
காபிர்களும் திருமதீனமா நகரத்திலுள்ள மிகுந்த முனாபிக்குகளாகிய காபிர்களும் இவர்களுக்குத் தகுதியான
உதவியாக வந்து சேர்ந்திலர்க ளென்று சொல்லி ஒப்பற வருந்தி எண்டிசைகளிலுள்ளவர்களு முணரும் வண்ணங்
கவுல் கொடுத்தார்கள்.
4135.
உடுத்தகலை யன்றுபொரு ளொன்றையு மெடாம
லெடுத்தகையி லாயுதமெ றிந்துசெலு மென்றார்
விடுத்தவர் நடப்பநபி மெத்தவு மிரங்கிக்
கொடுத்தனரை யொட்டகை சுமப்பநெல் குறித்தே.
13
|