|
இரண்டாம் பாகம்
4261.
தீய வங்குநோய் வரடுமூப் புறுதினி சிதைந்து
போய கன்றுள மதத்தெழி லிளமையும் பொருந்தி
யாய மெய்மயிர் சிலிர்த்துட றடித்தடன் மிகுத்துத்
தூய கொண்டலின் வேகமுற் றெழுந்தது சோகம்.
84
(இ-ள்) அவ்வாறு
சொல்ல, அவ்வொட்டகமானது தீமையையுடைய வங்கும், பிணியும், வரடும், மூப்பினாலுற்ற வருத்தமு மழிந்து
போய் விசாலித்து இதயத்தின்கண் மதப்புற்று அழகிய இளமைப் பருவத்தையு மடைந்து சரீரத்தி னிடத்துண்டான
உரோமங்கள் சிலிர்க்கப் பெற்று உடற் பருத்து வலிமையதிகரித்துப் பரிசுத்தத்தை யுடைய
காற்றினது வேகத்தைப் பொருந்தி யெழும்பிற்று.
4262.
அடிபெ யர்த்திடா மூப்புறு சோகமென் பதனை
வடிவின் மிக்கெழ விளமையி னியற்றிய மகிமைத்
திடம டுத்ததீன் மன்னவர் கண்டதி சயிப்ப
கொடைப னடத்தவண் கரநபி பரியின்மேற் கொண்டார்.
85
(இ-ள்) பாதங்களைப்
பூமியை விட்டும் பெயர்த்து வைக்க இயலாத விருத்தாப்பியத்தை யடைந்த அவ்வொட்டகமென்று சொல்லப்பட்டதை
அவ்வாறு வடிவத்தால் மிகவுமோங்கும் வண்ணம் இளம்பருவமாகச் செய்த மகிமையை வலிமையானது நெருங்கப்
பெற்ற தீனுல் இஸ்லாமென்னு மெய்ம்மார்க்கத்தை யுடைய அரசர்களான அசுஹாபிமார்கள் பார்த்து ஆச்சரியப்
படும்படி ஈகையைக் கொண்ட வலிய கைகளையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா
காத்திமுல் அன்பியா ஹபீபுறப்பில் ஆலமீன் செய்யிதுல் முறுசலீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்கள் தங்கள் குதிரையின் மீது ஏறினார்கள்.
4263.
காபிர் கட்டறாச் சேனையங் கடலினைக் கடந்து
கோப முற்றிய வயவரும் பரியும்பின் குழுமத்
தீப மொப்பிலா வொளிதரு நபியெனுந் திறலோர்
சாபி றொட்டக முன்செல மதீனத்திற் சார்ந்தார்.
86
(இ-ள்) அவ்வாறு ஏறிக்
காபிர்களாகிய சத்துராதிகளது உறுதியானது நீங்காத சேனாசமுத்திரத்தைத் தாண்டிக் கோபமானது முதிரப்
பெற்ற வீரர்களாகிய அசுஹாபிமார்களும் குதிரைகளும் பின்னால் நெருங்கும் வண்ணம் விளக்கமு
மொப்பாகாத பிரகாசத்தைத் தருகின்ற நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா காத்திமுல்
அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மென்னும் வலிமையையுடையோர்கள் அந்தச்
|