பக்கம் எண் :

சீறாப்புராணம்

157


முதற்பாகம்

     365. பாரினிற் சிறந்த மக்கமா நகர்க்குப்

             பயணமென் றிருக்குமன் றிரவி

        னேருமென் மடியில் விருக்கமொன் றெழுந்து

             நிலமிசை கனிகளைச் சிந்த

        வாரியே யருந்தி வறுமையும் பசியு

             மறந்துடல் களிப்பொடு மகிழக்

        கூருமோர் கனவு கண்டன னெனவே

             கோதையர்க் கெடுத்துரைத் தனரே.

75

     (இ-ள்) அன்றியும், இப்பூலோகத்தின்கண் மேன்மை தங்கிய மக்கமா நகரத்திற்கு நாங்கள் பிரயாண மென்றிருக்கும் அவ்விரவில் பொருந்திய என்மடியின்மீது ஒருமரமானது வளர்ந்து பூமியின்கண் கனிகளைச் சிதறவும் அவற்றையான் எனது கைகளினால் அள்ளியுண்டு எனது தரித்திரமும் பசியும் விட்டுத் தேகக்களிப்புடன் மகிழ்ச்சிடையவுமான ஆராய்ந்தறியக்கூடிய ஒரு சொப்பனத்தைக் கண்டேனென்று அப்பெண்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

 

366. அரந்துடைத் தொளிருங் கதிரிலை வேற்கண்

             ணாமினா திருமக னலிமா

        வரந்தரு குழந்தைக் கொருமுலைப் பாலே

             வழங்கின படியறி வதற்கே

        சுரந்திடுஞ் சூகை முலையமு தருந்தித்

             துயிறருங் காலையி லெடுத்துங்

        கரந்துதன் னிடது பான்முலை கொடுக்கிற்

             கனியிதழ் வாய்திறந் தருந்தார்.

76

     (இ-ள்) ஹலிமா அவர்கள் அரத்தினால் தேய்க்கப்பட்டு  விளங்கா நிற்கும் கிரணங்கள் தங்கிய இலைகளைக் கொண்ட வேல்போலுங் கண்களையுடைய ஆமினா அவர்களின் தெய்வீகம் பொருந்திய மகனாரான ஆசீர்வாதத்தையுடைய மதலை நபி முஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு ஒரு தனத்தினது அமுதத்தையே கொடுத்து வந்த விதத்தை யறிவதற்காக, அவர்கள் மாறாம லூறிக்கொண்டே யிருக்கும் தமது சூகை முலையின் கண்ணுள்ள பாலைக்குடித்து நித்திரை செய்கின்ற சமயத்தில் அவர்களைத் தமது கைகளினால் எடுத்தும் மறைத்து தமது இடது பக்கத்திலுள்ள பாலினது முலையைக் குடிக்கும்படி கொடுத்தால் கொவ்வைக்கனி போலும் தங்களது வாயினை விண்டு குடிக்க மாட்டார்கள்.