பக்கம் எண் :

சீறாப்புராணம்

196


முதற்பாகம்
 

467. ஆற்றி ருந்தெழுந் திருகையுஞ் சிரசினி லாக்கித்

    தூற்றும் வேல்விழி நீரிடுஞ் சுவடுகண் மறைப்ப

    நாற்றி சையினுங் கண்மலர் பரப்பிட நடந்து

    தேற்று நன்மறை மக்கமா நகரினைச் சேர்ந்தாள்.

77

     (இ-ள்) அப்போது ஹலிமா அவர்கள் அந்தப் பாதையின் கண்ணிருந்து எழும்பி இருகைகளையும் தலையின்மேல் உயர்த்தி வைத்துக்கொண்டு வேலாயுதம் போன்ற இரண்டு கண்களிலுமிருந்து சிதறும் நீரானது பூமியின்மீது வைக்கின்ற பாதத்தினது சுவடுகளை மறைக்க, விழியாகிய தாமரை மலர்களை நான்கு திசைகளிலும் பரப்பிடும்படி நடந்து தேறுதலைத் தராநிற்கும் நன்மை தங்கிய வேதங்களையுடைய திருமக்கமா நகரத்தை வந்து சேர்ந்தார்கள்.

 

468. அப்துல் முத்தலி பெனுமர சணிமனை யடுத்துச்

    சுவன நாயகக் குரிசிலை வழியிடை தோற்றிப்

    புவியிற் றோன்றிய துன்பமு முதியவன் புகலச்

    சவிகெ டப்பெருந் தேவதந் தரைப்படிந் ததுவும்.

78

     (இ-ள்) அவ்வாறு திருமக்கமாநகரத்தைச்சார்ந்து அப்துல் முத்தலிபென்று சொல்லாநிற்கும் வேந்தரவர்களினது அழகிய வீட்டின்கண் நெருங்கிச் சுவர்க்கலோகத்திற்கு நாயகரான பெருமையிற் சிறந்த நபிமுஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பாதையினிடத்தில் வைத்துத் தோற்று, அதனால் இவ்வுலகத்தில் உண்டாகிய துன்பங்களையும், காட்டின்கண் வந்த அக்கிழவனானவன் முறையிட்டுச் சொல்லவே! அச்சொற்களைக் கேட்ட பெரிய தேவதமானது தனது பிரபை கெடும்படிப் பூமியின்கண் விழுந்து கிடந்ததையும்.

 

469. மரும லர்த்தொடைத் தடம்புயன் செவிமடற் றுளையிற்

    றிருக வெந்துதீ யுமிழ்ந்தவே றிணித்தன சிவணக்

    கருகி யீரலுஞ் சிந்திடத் தெளிமனங் கலங்கி

    யுருகக் கூறின ளூற்றெடுத் தொழுகுநீர் விழியாள்.

79

     (இ-ள்) வாசனைதங்கிய புஷ்பமாலையணிந்த பெருமை பொருந்திய புயங்களையுடைய அப்துல் முத்தலிபவர்களின் செவிமடல்களினது துவாரங்களில் முறுகும்படி எரிந்து அக்கினியைக் கொப்பளித்த வேலாயுதத்தைத் திணித்தாற்போல எவ்விடமும் கரிந்து ஈரற்குலையுஞ் சிதறிடத் தெளிந்த சிந்தையும் கலக்கமடைந்து கரையும்படி ஊற்றெடுத்துப் பாயாநிற்கும் நீரினைக்கொண்ட கண்களையுடைய ஹலிமா அவர்கள் சொன்னார்கள்.