முதற்பாகம்
20.
அடிய டித்தொறும் வழுவலால் விதிவிலக் கறியேன்
படிப டித்தசெஞ்
சொற்புல வோர்முனம் பகர்த
லிடியி டித்திடு
மாரவா ரத்தினுக் கெதிரோர்
நொடிநொ டிப்பது
போலுமொத் திருந்ததென் னூலோ.
20
பதவுரை
அடி அடிதொறும் - வரிகளெல்லாவற்றிலும்,
வழுவு அலால் - குற்றமல்லாது, விதிவிலக்கு அறியேன் - இலக்கண விதியையும் விலக்கையுந்
தெரியாதவனான யான், படிபடித்த - பூமியில் அவ்விலக்கண நூல்களின் விதிகளையும் விலக்குகளையும்
கற்ற, செம் சொல்புலவோர் முனம் - அழகிய வார்த்தையையுடைய கவிவாணர்களின் முன்னர்,
பகர்தல் என நூல் - பகர்தலாகிய எனது நூலானது, இடி இடித்திடும் ஆரவாரத்தினுக்கு எதிர் -
இடிஇடிக்கும் பெரிய ஓசைக்கு முன்னர், ஓர் நொடி நொடிப்பது போலும் - கையினால் ஒருநொடி
நொடிப்பதைப் போலும், ஒத்து இருந்தது - பொருந்தி இருந்தது.
பொழிப்புரை
வரிக ளெல்லாவற்றிலும் குற்றமல்லாது
இலக்கண விதியையும் விலக்கையுந் தெரியாதவனான யான் பூமியில் அவ்விலக்கண நூல்களின்
விதிகளையும் விலக்குகளையும் கற்ற அழகிய வார்த்தையை யுடைய கவி வாணர்களின் முன்னர்
பகர்தலாகிய எனது நூலானது இடி இடிக்கும் பெரிய ஓசைக்கு முன்னர் கையினால் ஒரு நொடி நொடிப்பதைப்
போலும் பொருந்தியிருந்தது.
|