பக்கம் எண் :

சீறாப்புராணம்

279


முதற்பாகம்
 

         சுற்றமுங் கிளையுஞ் சிறப்பொடு தழைத்துச்

              சூழ்ந்திருந் தணிதிகழ் வதுபோற்

         குற்றமி னதியி னிருகரை மருங்குங்

              குறைவறத் தளிர்த்தன தருக்கள்.

19

     (இ-ள்) அன்றியும் வற்றாத சம்பத்தின் மிகுதியானது இனிமையுடனோங்கா நிற்கும் அழகிய வகுதை நகரத்திலுள்ள ஹூசையின் நயினாரவர்கள் பெற்றபேறானது இதுவென்று சொல்லும்படி பூரணவிரத்தின மாயுதயமான சத்தியவதிகாரியாகிய இந்நூலின் கொடைநாயகம் அபுல் காசீமரைக்காயரவர்களை அவர்களின் உற்றார்களும் பந்துக்களும் தளிர்த்து சிறப்புடன் வளைந்திருந்து அழகு பிரகாசிப்பது போலக் குற்றமற்ற அவ்வாற்றினது இருகரைகளின் பக்கங்களிலும் விருட்சங்கள் குறைவில்லாது வளைந்துநின்று தளிர்த்துப் பிரகாசித்தன.

 

     699. நாணமும் புழுகும் பாளிதக் குலமு

              நறைகெட மிகுந்தவா சமதாய்த்

         தேனினுங் கருப்பஞ் சாற்றினுந் திரண்ட

              தெங்கிள நீரினு மினிதா

         யூனமி னதியி னொருகைநீ ரருந்தி

              யுடல்குளிர்ந் தரும்பசி யொடுங்கி

         யானை மலர்ந்து முகம்மதைப் புகழ்ந்தங்

              கனைவரு மதகளி றானார்.

20

     (இ-ள்) அப்போது அவ்விடத்திலுள்ள யாவர்களும் கஸ்தூரி புழுகு பாளிதக்கூட்ட முதலியவைகளின் வாசனைகளும் கெட்டுப் போகும்படிப் பெருகிய வாசனையுடையதாய்த் தேன் கருப்பஞ்சாறு திரட்சியுற்ற தெங்கினிளநீர் இவைகளின் இனிமையைப் பார்க்கிலும் இனிமையுடையதாய்க் குறைபாடற்ற அவ்வாற்றினது ஜலத்தில் ஒரு சிறங்கை நீரைக் குடித்துச் சரீரங் குளிர்ச்சியடைந்து அரிய பசியானது ஒடுங்கி முகமலர்ச்சி பெற்று நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைத் துதித்து மதங்களைப் பொழியாநின்ற யானைகளை நிகர்த்தார்கள்.