பக்கம் எண் :

சீறாப்புராணம்

282


முதற்பாகம்
 

     706. மருமிக்க புயத்தெழில் வள்ளலுடன்

        கருமத்தொழில் காரரு மற்றவரு

        மொருமித்து நடந்துறு வாவெனுமோ

        ரருவிக்கரை மேவி யடுத்தனரே.

7

     (இ-ள்) அவ்விதம் சந்தோஷமடைந்து வாசனைமிகுந்த தோள்களையுடைய அழகிய வள்ளலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களுடன் கடமைத் தொழில் செய்யப்பட்டவர்களும் மற்றும் வியாபாரிகளும் ஒன்றுபட்டு நடந்து சென்று உறுவாவென்று சொல்லும் ஓராற்றங்கரையை நெருங்கி யடுத்தார்கள்.

 

     707. வண்டார்பொழி லார்வரை யூடருவி

        யுண்டார்சில ருண்கிலர் காணெனவே

        கண்டார்நபி வல்லவ னைக்கருதிக்

        கொண்டார்புன லுங்குதி கொண்டதுவே.

8

     (இ-ள்) அப்பொழுது வண்டுகள் நிறைந்த சோலைகள் பொருந்திய மலையினிடமாக இருந்து ஒழுகாநிற்கும் அந்த ஆற்றிற் சொற்பமாக இருந்த நீரைச் சிலபேர்கள் குடித்தார்கள். மீதியில்லாது சில பேர் குடித்திலர் பாருங்களென்று சொல்ல, நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் பார்த்து வல்லவனான ஹக்குசுபுகானகு வத்த ஆலாவைச் சிந்தையின்கண் எண்ணிப் பிரார்த்தித்துக் கொண்டார்கள். உடனே அவ்வாற்றில் இருகரைகளும் நிரம்ப நீரும் பெருகிவந்தது.

 

     708. அளித்தானுண நீர்கிடை யாதகரை

        யுளித்தானிலை யாதிட வோடுபுனற்

        குளித்தார்குடித் தார்மகிழ் கொண்டுடலங்

        களித்தாடி நடந்தனர் காளையரே.

9

     (இ-ள்) ஆனால் முன்னர்க் கைகளினால் அள்ளியுண்ணும் வண்ணம் நீரானது கிடையாத கரைகளையுடைய அவ்வாற்றினிடத்தில் ஆளிறங்குதற்கு நிலையாதவிதமாய் இரு மருங்குகளிலும் அலைகளை வீசும்படி யோடாநின்ற அந்த நிலத்தின்கண் காளைப் பருவத்தையுடைய யாவர்களும் முன்தங்களிற் சிலபேர்களுக் குண்டாயிருந்த குறையானது யாதொன்று மில்லாமற் குளித்துக் குடித்து மனமகிழ்ச்சி கொண்டு சரீரமானது களிப்படைந்து ஆனந்தக்கூத்தாடி நடந்து சென்றார்கள்.

 

     709. மகிழ்கொண்டு நடந்த வனந்தனிலே

        துகடுன்றி விசும்பு துடைத்திடவே

        நிகழ்கின்ற நெடுந்தொலை சென்றதின்மே

        லுகள்கின்றொரு வன்வர வுற்றனனே.

10