பக்கம் எண் :

சீறாப்புராணம்

324


முதற்பாகம்
 

அதிகரித்து ஓடாநிற்கும். அம்முறைமைகளை நீர்பார்த்து அவர்கள் தாம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மென்று மனசின்கண் ணுணர்ந்து அந்த நன்மை பொருந்திய சன்மார்க்கத்தையுடைய குரிசிலான நபிகள் பெருமானாரவர்கட்கு எனது வந்தனத்தையுஞ் சொல்லுமென்று சொன்னார்கள்.

 

831. இன்னண மியம்பி யாதி யிடத்திரந் தரதா யென்றன்

    றன்னுயிர் நிற்கச் செய்து சார்ந்தன ரவணி லீசா

    மன்னவா கேட்டேன் கண்டேன் மணத்தெனை யெடுத்த டக்கிப்

    பின்னெழுந் தருள்க வென்ன வுரைத்தனன் பிறங்கு தாரான்.

46

      (இ-ள்) நபிஈசா அலைகிஸ்ஸலா மவர்கள் இந்தப்படியாகக் கூறி ஆதியான ஜல்லஜலாலஹூவத்த ஆலாவின் திருச்சந்நிதானத்தில் அரிதாய் மன்றாடி என்னுடைய ஜீவனானது தங்களைக் காணும் பரியந்தம் நிலைபரமாக நிற்கச்செய்து அவர்களிருக்கும் அவ்விடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். மன்னவராகிய நபிகள் பெருமானே! அவர்கள் சொல்லியவை அனைத்தையும் எனது காதுகளினாற் கேள்வியுற்றேன். கேள்வியுற்றபடியே தங்களையுமின்று கண்டேன். இனி எனது ஜீவன் நிலைத்திருக்க மாட்டாது. ஆதலால் என்னைப் பரிமளத்தோடும் எடுத்து அடக்கஞ் செய்துவிட்டுப் பின்னர் தாங்கள் நாடிவந்த ஷாமென்னும் நகரத்திற்கு எழுந்து செல்லுங்களென்று பிரகாசியாநின்ற மாலைகளை யணிந்த தோள்களையுடைய அவ்விசுறா வென்னும் பண்டிதன் சொன்னான்.

 

கலிநிலைத்துறை

 

832. மாலை தாழ்புய முகம்மது கேட்டுள மகிழ்ந்த

    காலை யவ்வயி னுறைந்தவேற் காளையர்க் கெல்லாம்

    வேலை வாருதி யமுதென விருந்தெடுத் தளித்தான்

    சோலை முக்கனி தேனொடும் பாகையுஞ் சொரிந்தே.

47

     (இ-ள்) மாலைகள் தாழப்பெற்ற தோள்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் இசுறாவென்னும் அப்பண்டிதன் கூறிய வார்த்தைகளைக் காதுகளினாற் கேள்வியுற்று மனமகிழ்ச்சியடைந்த சமயத்தில் அவ்விடத்தில் தங்கிய வேற்படை தாங்கிய கையினையுடைய புருடர்களான அவ்வியாபாரிக ளனைவர்களுக்கும் சோலையின்கண் உண்டாகாநிற்கும் முக்கனிகளாகிய வாழை பலா மாவுடன் தேனையும் சர்க்கரையும் பொழிந்து அலைகளையுடைய