பக்கம் எண் :

சீறாப்புராணம்

347


முதற்பாகம்
 

898. உற்றதென் வயினுறை சரக்கொன் றாயினும்

    விற்றில முகம்மதென் விடுதிபுக்கிடி

    லற்றையின் மாறியூ திபமுண் டாக்குவேன்

    மற்றடப் புயத்திர்க ளென்று வாழ்த்தினான்.

42

     (இ-ள்) வலிமையைக் கொண்ட விசாலமான புயங்களையுடைய வியாபாரிகளே! பொருந்திய எனது இடத்தில் தங்கிய சரக்குகளில் ஒன்றாயினும் இன்னும் விற்கவில்லை. ஆதலால் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் எனது விடுதியின்கண் வந்து புகுதுவார்களே யானால் அன்றையத் தினமே அச்சரக்குக ளனைத்தையும் விற்று இலாபத்தை யுண்டாக்குவேனென்று அவர்களை வாழ்த்திச் சொல்லினான்.

 

899. என்றவ னுரைத்தலு மெழுந்து வள்ளலுஞ்

    சென்றவ னுறைந்திடும் விடுதி சேர்ந்தபின்

    மின்றவழ் மணிகலை விலையென் றோதிய

    தொன்றிரண் னெடத்தொழி லுறுதி யானதே.

43

     (இ-ள்) என்று அவன் சொல்லிய மாத்திரத்தில் வள்ளலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் எழுந்து நடந்து போய் அவன் தங்கிய விடுதியின்கண் அடைந்த பின்னர்ப், பிரபையானது தவழா நிற்கும் இரத்தினவர்க்கம் வஸ்திரம் முதலியவைகள் முன்னர் விலையென்று கூறியது ஒன்றுக்கு இரண்டென்று சொல்லும்படி விற்று அவ்வியாபாரத் தொழில் உறுதியாய் முடிந்தது.

 

900. தன்னிடத் துறைந்தபொற் சரக்குங் கோவையு

    முன்னிய விலைக்குவிற் றொடுக்கி யந்நகர்

    மன்னிய பண்டமும் வாங்கி வள்ளறன்

    பொன்னடி தன்முடி பொலியச் சூட்டினான்.

44

     (இ-ள்) அவன் அவ்வாறு தன்னிடத்தில் தங்கிய அழகிய சரக்குகளையும் ஆபரணக் கோவைகளையும் தான் நினைத்த விலைக்கு விற்று முடித்து அந்த ஷாம் நகரத்தின்கண் பொருந்திய பொருள்களையும் வாங்கி வள்ளலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பொற்பாதங்களில் தனது தலையைப் பொலியும்படி பொருத்தித் தெண்டனிட்டான்.