பக்கம் எண் :

சீறாப்புராணம்

368


முதற்பாகம்
 

958. இருந்த காலையி லனைவரும் வந்தெழி லிலங்கிச்

    சொரிந்த மாமுக முகம்மதி னிணையடி தொழுது

    புரிந்த தீங்கினால் வந்தவை யனைத்தையும் புகன்றார்

    விரிந்த வாய்புலர்ந்த தேங்கிய மனத்தொடு மெலிவார்.

58

     (இ-ள்) அவ்விதம் அந்தத் தரகனானவன் சொல்லிவிட்டு அங்கிருந்த சமயத்தில், மலர்ச்சியமைந்த தங்களது வாயானது உலர்தலுற்று ஏக்கங்கொண்ட இருதயத்துடன் வாட்டமடைவோர்களாகிய அந்தக் காபிர்களான சூதர்களனைவர்களும் வந்து அழகானது பிரகாசித்துச் சொரியப்பெற்ற பெருமை தங்கிய முகத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் இருபாதங்களையும் வணங்கித் தாங்கள் செய்தத் தீமையினால் தங்களுக்கு வந்து நேர்ந்தவைகளெல்லா வற்றையும் சொன்னார்கள்.

 

959. வெறுத்த புன்மனக் கொடியம்யாம் விளைத்திடும் வினையைப்

    பொறுத்து நல்லரு ளெம்வயின் புரிகெனப் போற்றி

    மறுத்து நன்மொழி புகன்றனர் வளருநல் லறத்தை

    யறுத்துத் தீவினைப் பயிர்விளைத் திடநினைத் தவரே.

59

     (இ-ள்) அன்றியும், ஓங்கா நிற்கும் நன்மை தங்கிய தருமத்தை அறச்செய்து பாவமாகிய பயிரை விளைத்திடும்படி கருதிய சிந்தையை யுடையவர்களான அக்காபிர்கள், யாவர்களாலும் மறுக்கப்பட்ட கீழ்மையாகிய மனசையுடைய துஷ்டர்களான நாங்கள் செய்திடும் பாதகத் தொழிலைத் தாங்கள் மனஞ்சகித்து எங்கள்பால் நல்ல கிருபையை செய்யுங்களென்றுத் துதித்து நல்லவார்த்தை சொன்னார்கள்.

 

960. வருந்தி நன்மொழி தரகனங் குரைத்தது மருவார்

    பொருந்தி நின்றவை புகன்றது மனத்தினிற் பொருத்தித்

    திருந்து வெண்புகழ் முகம்மது செழுங்கரம் போக்கி

    யிருந்த வன்றனைக் கொணர்கென வாய்மலர்ந் திசைத்தார்.

60

     (இ-ள்) அப்போது திருந்தா நிற்கும் வெள்ளிய கீர்த்தியையுடைய நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வருத்தமுற்று நல்ல வார்த்தைகளாகத் தரகன் வந்து தங்களிடத்தில் சொல்லிய சமாச்சாரத்தையும்; சத்துராதிகளாகிய அந்தச் சூதர்களின் கூட்டம் மனமிசைந்து நின்று சொல்லிய சமாச்சாரத்தையும், இருதயத்தின்கண் பொருந்தும்படி செய்து செழிய கைகளைப் போக்கி இருந்தவனாகிய அந்தச் சூதனை இங்கு கொண்டு வாருங்களென்றுத் தங்களது வாயைத் திறந்து சொன்னார்கள்.