முதற்பாகம்
969.
தோற்ற நும்மிடத்
தலதுவே றிலைச்சுடுங் கனலை
யாற்றும் பேற்றியா
லுமதிடத் தடைகுவ தலது
வேற்றி டம்புகா
புக்கினு மெய்யினில் வெதுப்ப
வூற்ற மின்றதற்
குறுகுணந் தானுமின் றெனவே.
3
(இ-ள்) அவ்வக்கினியின் தோற்றமானது
உம்மிடத்தி லிருந்தல்லாமல் வேறே யொருவரிடத்திலிருந்து முண்டாகவில்லை. அன்றியும், நீர் அந்தச்
சுடுகின்ற அக்கினியைச் சகித்துக் கொள்ளும் தன்மையினால் அது உம்மிடத்தில் வந்து சேருகின்றதன்றி
மற்ற இடங்களிற் போய்ச் சேராது. ஒரு வேளை அப்படிப் போய்ச் சேர்ந்தாலும் அதற்குச் சரீரத்தின்கண்
சூட்டிசை செய்ய வலிமையில்லை. அங்ஙனம் செய்வது அதற்குப் பொருந்திய குணமுமில்லையென்று
சொன்னார்கள்.
970.
மெலிவி லாதசொற்
கேட்டலுங் கம்மியன் வெகுண்டவ்
வுலையி னிற்கரும்
பொன்புகுத் துமியொடு கரியும்
பொலிய வைத்தெரி
மூட்டினன் புகையிருட் படல
மலித ரக்கனல்
கொழுந்துவிட் டெழுந்தது வளர்ந்தே.
4
(இ-ள்) நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் சொல்லிய வாட்டமற்ற அவ்வார்த்தைகளை அந்தக் கொல்லன் தனது காதுகளினாற்
கேள்வியுற்ற மாத்திரத்தில், கோபமாய் அவ்வுலையின்கண் ஒரு இரும்புப் பாளத்தைப் புகுத்திப்
பெருகும்படி உமியுடன் கரிகளையும் இட்டு நெருப்பை மூட்டினான். அவ்விதம் மூட்டவே தூமத்தினது அந்தகாரப்
படலம் அதிகரிக்கும் வண்ணம் நெருப்பானது ஓங்கிக் கொழுந்து விட்டெழும்பினது.
971.
உருகி வெந்தவல்
லிரும்பினை யுலைமுகத் தெடுத்துக்
கருகு மேனியன் கட்கடைக்
கனற்பொறி கதுவ
வருகி ருந்தெழுந்
தங்கைகள் சிவப்புற வடித்தான்
பெருகு மக்கினிக்
கொழுந்துக டெறித்தது பிதிர்ந்தே.
5
(இ-ள்)
அவ்வாறு கொழுந்து விட்டெழுந்து உருகி வெந்த வலிய அந்த இரும்புப் பாளத்தைக் கருகா நிற்கும் மேனியையுடைய
அந்த கொல்லன் உலைப்புறத்தில் நின்று மெடுத்துத் தனது இருகடைக்கண்களிலும் அக்கினியின் கங்கானது
அதிகமாய்ப் பற்றும்படி பக்கத்திலிருந்தெழும்பி உள்ளங்கைகள் செந்நிறத்தைப் பொருந்தும் வண்ணம்
சம்மட்டிகொண்டு அடித்தான். அங்ஙனம் அடிக்கவே பெருகாநின்ற நெருப்பின் கொழுந்துக ளானவை சிதறி
நானா பக்கங்களிலும் தெறித்தன.
|