பக்கம் எண் :

சீறாப்புராணம்

494


முதற்பாகம்
 

1284. பதியின் மிக்கநன் மறையவன் முகம்மதை நோக்கித்

     துதிசெய் தும்முழை வந்தவா றனைத்தையுந் தொகுத்து

     முதிர்த ரும்புக ழோயுரை கென்றலு முறையா

     விதிய வன்றிருத் தூதர்நன் றெனவிளம் புவரால்.

44

      (இ-ள்) அதைக் கேட்ட இப்பூமியின்கண் மிகுந்த நன்மையையுடைய வேதியனான அவ்வுறக்கத் தென்பவன் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்துப் புகழ்ந்து முற்றிய கீர்த்தியையுடையவர்களே! தங்களிடத்தில் வந்த வரலாறுகளெல்லாவற்றையும் ஒழுங்காய் என்னிடத்தில் சொல்லுங்ளென்று கேட்டமாத்திரத்தில், வரிசையாக சகல ஜீவராசிகளுக்கும் இன்னபடியென்று நியமிக்கும் விதிப்பை யுடையவனான ஜல்லஜலாலகு வத்த ஆலாவின் திருத்தூதராகிய அந்நபிகள் பெருமானவர்கள் நல்லதென்று சொல்லுவார்கள்.

 

1285. வரையி னிற்றனி யிரவினி லிருக்கையின் மதியி

     னுரையின் மிக்கவ ரொருவர்வந் தென்பெய ருரைத்துப்

     பரிவி னாலிவ ணுறைந்தினி ரோவெனப் பகர்ந்து

     விரைவி னின்மறு நாளுமவ் வுரைவிளம் பினரால்.

45

      (இ-ள்) யான் தனியாக இராக்காலத்தில் ஹிறாமலையின்கண் இருக்கும் போதில் அழகையுடைய வார்த்தைகளினால் மிகுந்தவரான ஒருவர் என்னிடத்தில் வந்து எனது நாமத்தைச் சொல்லி அன்பினால் இவ்விடத்தின்கண் தங்கினீர்களோ? என்று கூறிச் சீக்கிரத்தில் மற்றநாளும் அந்த வார்த்தைகளையே சொன்னார்.

 

1286. இருதி னத்தினு முரைத்தவர் மறுதினத் தெய்தித்

     தெரிம ணித்துகி லெனதுசெங் கரத்தினிற் சேர்த்தி

     யரிய நாயக நபியெனும் பெயருமக் களித்தா

     னுரிமை யீரினி யோதுமென் றுரைத்தன ருவந்தே.

46

      (இ-ள்) அவ்வாறாக இரண்டு நாளிலும் சொன்ன அவர் மறுநாளாகிய மூன்றாம் நாளில் என்னிடத்தில் வந்து பொருந்தி இரத்தினவர்க்கங்கள் விளங்கிய ஒரு வஸ்திரத்தை செவ்விய எனது கையிற் சேர்த்து சினேகிதரான முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமானவர்களே! உங்களுக்கு அரிய நாயகனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் நபியென்று சொல்லும் ஓர் பட்டத்தைக் கொடுத்தான். நீங்கள் இனியோதுங்களென்று ஆசையோடும் சொன்னார்.