| 
 முதற்பாகம் 
  
1496. 
துனிமனத் துறைய
முன்னோன் றோன்றலை யுரைத்தா யென்னி 
     லினியெவை
யுரைப்ப னியானு மியனபி மொழிந்த மார்க்கந் 
     தனினடு நிலைமை
யானேன் சாதியிற் றலைவர் கூடி 
     நனிபகை வரினுங்
காண்பேன் காணுநீ நவிற லென்றார். 
157 
      (இ-ள்) எனது
தமையனாரான அப்துல்லா வென்பவரின் புத்திரராகிய முகம்மதை மனசின்கண் துன்பமானது தங்கும்
வண்ணம் பேசினாயென்று சொன்னால் இனியானெவற்றைப் பேசுவேன். யானும் ஒழுங்கையுடைய அந்நபிகள்
பெருமானவர்கள் கூறிய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தினது நீதியையுடையவனாயினன். நமது
இனத்தின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து அதனால் மிகுத்த விரோதமானது வந்தாலும் பார்ப்பேன்.
நான் சொன்னதை நீ பார்ப்பாயாகவென்று சொன்னார்கள். 
  
1497. 
அணிதிகழ் அம்சா வஞ்ச மடரபூ சகுலை நோக்கித்
     தணிவிலா வெகுளி
மாற்றஞ் சாற்றலு மவனைச் சூழ்ந்து 
     பணிபனீ மகுசூ
மென்னுந் திரளவர் பலருங் கோபத் 
     துணிவுட னமருக்
கேற்ற சுடர்ப்படைக் கலன்க ளேற்றார். 
158 
      (இ-ள்)
அழகானது பிரகாசியா நிற்கும் ஹம்சா அவர்கள் வஞ்சகம் நெருங்கப் பெற்ற அபூஜகி லென்பவனைப்
பார்த்து அவ்வாறு குறையாத கோபத்தை யுடைய வார்த்தைகளைப் பேசின மாத்திரத்தில் அவனை
வளைந்து வணங்கா நிற்கும் பனீமகுசூ மென்று சொல்லுங் கூட்டத்தவர்களான பலபேர்களும் கோபத்தினது
திடத்தினுடன் யுத்தத்திற்குப் பொருந்திய பிரகாச மமைந்த ஆயுதங்களைக் கொண்டார்கள். 
  
1498. 
இனத்தவர் நெருங்கிச் செவ்வா யிதழ்மடித் திருகண் சேப்பச்
     சி்னத்ததும்
அம்சா வென்னுஞ் சிங்கவே றியல்பு நோக்கி 
     மனத்தினி
லடக்கிச் செவ்வி மதியொடுந் தமருக் கேற்பக் 
     கனத்துரை
யெடுத்துக் காட்டி யபூசகல் கழற லுற்றான். 
159 
      (இ-ள்) தனது
பந்துக்களான அந்தப் பனீமருசூ மென்னும் கூட்டத்தார்கள் அவ்வாறு ஒருவரோடொருவர் நெருக்கமுற்றுத்
தங்களின் சிவந்த வாயினது அதரங்களை மடியச் செய்து இரண்டு கண்களும் செந்நிற மடையும்படி
கோபித்ததையும் ஹம்சாவென்று சொல்லும் ஆண் சிங்கமானவர்களின் தகுதியையும் அபூஜகிலென்பவன்
பார்த்து மனத்தின்கண் அமையச்செய்து அழகிய புத்தியோடும் பந்துக்களாகிய அந்தக்
கூட்டத்தார்களுக்குப் பொருந்தும் வண்ணம் பெருமை தங்கிய வார்த்தைகளை எடுத்துக்காட்டிச்
சொல்ல ஆரம்பித்தான். 
 |