பக்கம் எண் :

சீறாப்புராணம்

570


முதற்பாகம்
 

உமறுகத்தாபீமான்கொண்ட படலம்

 

கலிநிலைத்துறை

 

1503. சமர கேசரி யப்துல்லா தருதிரு மதலைக்

     கமரர் கோனிழிந் தருநபி யெனும்பெய ரளித்துத்

     திமிர வெங்குபிர் கடிந்துதீ னிலைநெறி நிறுத்திக்

     கமைத ரும்படி யாண்டுநான் கெனக்கடந் ததற்பின்.

1

      (இ-ள்) யுத்தச் சிங்கமாகிய அப்துல்லா அவர்கள் இவ்வுலகத்தின்கண் தந்த தெய்வீகம் பொருந்திய புதல்வரான நாயகம் ஹபீபுறப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு அமரேசுவரராகிய ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் ஆகாயத்தை விட்டும் இறங்கி வந்து நபியென்று சொல்லும் நாமத்தை யுதவிப் பொறுமை தரும் வண்ணம் அந்தகாரமான குபிர்மார்க்கத்தை யழித்துத் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை நிலைநிறுத்தி வருடமானது நான்கென்று சொல்லும்படி சென்றதின் பின்னர்.

 

1504. வருட நான்குசென் றைந்தினின் முகம்மது மொருநா

     ளிரவி னிற்றனித் திருந்திரு கரமெடுத் தேந்திப்

     பொருவி லாமுத லிறைவனை யீறிலாப் பொருளை

     யுருகு மெய்மன வாக்கொடும் புகழெடுத் துரைத்தார்.

2

      (இ-ள்) அவ்வாறு நான்கு வருடம் சென்று ஐந்தாவது வருடத்தில் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஒருதினம் இரவில் ஏகமாயிருந்து இரண்டு கைகளையும் தூக்கி ஏந்தி ஒப்பற்ற முதன்மையாகிய இறைவனை, முடிவில்லாத பொருளான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவை, இளகாநிற்கும் மனம், வாக்கு, காயமாகிய மூன்றினோடும் துதிகளை எடுத்தோதினார்கள்.

 

1505. உலகி னிற்கரு தலர்க்கட லரியும றினைக்கொண்

     டலத பூசகு லினைக்கொடு தீனிலை யதனைப்

     பெலனு றும்படி யெனக்கருள் பிறிதிலை யெனவே

     நலனொ டுந்துவாச் செய்தனர் முகம்மது நபியே.

3