பக்கம் எண் :

சீறாப்புராணம்

645


முதற்பாகம்
 

1713. அரசன் சொற்றவை கேட்டவ ரனைவருந் தெளிந்து

      புரிசை சூழ்தரு மக்கமா நகரியிற் புதுமை

      விரைவிற் காண்குவ துண்டெனச் சூழ்ச்சியின் விரித்தார்

      மரைம லர்த்தடஞ் சூழ்தரு திமஸ்குமன் னனுக்கே.

55

      (இ-ள்) அரசனாகிய ஹபீபென்பவன் சொல்லிய சமாச்சாரங்களைக் காதுகளினாற் கேள்வியுற்ற அவர்களியாவர்களும் தங்களின் மனசின்கண் தெளிந்து தாமரைப் புஷ்பங்களை யுடைய தடாகங்கள் வளைந்த திமஸ்கு நகரத்தின் அதிபனான அவ்வரசனுக்குக் கோட்டை மதிள்கள் சூழப்பெற்ற திருமக்கமா நகரத்தில் சீக்கிரமாகக் காணக்கூடிய அற்புதமுண்டு மென்று தங்களின் நுண்ணிய அறிவினால் விரித்துச் சொன்னார்கள்.

 

1714. கேட்டு மன்னவ னன்கெனக் கிளரொளி வடிவாட்

      பூட்டுந் திண்கர வீரரு மடற்புர விகளுங்

      கோட்டு வாரணத் தொகுதியு மரசர்கள் குழுவு

      மீட்டு மிற்றையி லெழும்புற விடுதியி லென்றான்.

56

      (இ-ள்) அவர்கள் அவ்விதம் சொல்லிய சமாச்சாரத்தை ஹபீபரசன் தனது காதுகளினால் கேள்வியுற்று நல்லதென்று சொல்ல உயர்ந்த பிரகாசமமைந்த கூர்மை தங்கிய வாளாயுதத்தை யணியா நிற்கும் திண்ணிய கையை யுடைய வீரர்களும் வலிமையைக் கொண்ட குதிரைப் படைகளும் கொம்புகளை யுடைய யானைப் படைகளும் இராஜர்களின் கூட்டமும் அளவு படுத்திய இன்றைய தினத்திலேயே வெளிவிடுதியின்கண் எழும்பிச் செல்லுங்களென்று கட்டளைச் செய்தான்.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

1715. நிருபர்கோ னெழுக வென்ன நிகழ்த்தமந் திரத்தின் மிக்கார்

      புரவியுந் தறுக ணால்வாய்ப் புகர்முகக் களிறுந் தேரு

      மரசரும் வருக வென்ன வணிமணிக் கனக மாடத்

      தெருவினு நகர முற்றுஞ் செழுமுர சறைவித் திட்டார்.

57

      (இ-ள்) இராஜாதிபனான அந்த ஹபீபரசன் அவ்வாறு எழும்புங்களென்று கட்டளை செய்யவே, ஆலோசனையினால் மேலாகிய அங்கு கூடியிருந்தவர்கள் குதிரைகளும் அஞ்சாமையையும் நாலப்பெற்ற வாயையும் புள்ளிபடர்ந்த முகத்தையு முடைய யானைகளும் இரதங்களும் இராஜர்களும் வருக வென்று அழகிய இரத்தினங்களைக் கொண்ட பொன்னினாலான மாடங்களையுடைய வீதிகளிலும் மற்றுமுள்ள அந்த நகரத்திளெல்லாவிடங்களிலும் செழிய முரச மறைவோனைக் கொண்டு முரச மறைவித்தார்கள்.