பக்கம் எண் :

சீறாப்புராணம்

740


முதற்பாகம்
 

ஹபீபுராஜா வரிசைவரவிடுத்த படலம்

 

கலிவிருத்தம்

 

1974. பூங்கொடி யெனமுன நின்ற பூவையைத்

     தேங்கம ழமுதவாய் திறந்து நந்நபி

     தாங்குதெண் டிரைத்தடத் திமஸ்கு மன்னவன்

     பாங்கினி னுறைகெனப் பரிவிற் கூறினார்.

1

      (இ-ள்) நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பூவினாலான கொடி போலும் முன்னால் நின்ற அந்தப் பெண்ணைப் பரிமளமானது கமழப் பெற்ற தங்களின் அமுதவாயைத் திறந்து தெள்ளிய அலைகளை யடியா நிற்கும் தடாகங்களையுடைய திமஸ்கு நகரத்தினது அரசனாகிய ஹபீபென்பவனின் பக்கத்தில் போய்த் தங்குவாயாகவென்று அன்போடுங் கூறினார்கள்.

 

1975. வரிவிழிச் சிறுநுதன் மடந்தை நன்னெறிக்

     குருவிடம் விடுத்தெழில் குலவச் சென்றணி

     விரிகதி ரிலங்கிலை வேற்கை மன்னவன்

     றிருவடி கருங்குழற் சென்னி சேர்த்தினாள்.

2

      (இ-ள்) அவ்வாறு கூறவே, வரிகள் படர்ந்த கண்களையும் சிறிய நெற்றியையு முடைய அப்பெண்ணானவள் நன்மை பொருந்திய சன்மார்க்கத்தினது குருவாகிய நாயகம் நபி றசூல்சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் சந்நிதானத்தை விட்டும் நீங்கி அழகானது பிரகாசிக்கும் வண்ணம் நடந்து போய் அலங்காரமான விரிந்த கிரணங்களொளிரா நிற்கும் இலைகளைக் கொண்ட வேலாயுதத்தைத் தாங்கிய கையை யுடைய ஹபீபரசனின் அழகிய பாதங்களில் கரிய கூந்தலையுடைய தனது தலையைப் பொருத்தி வணங்கினாள்.

 

1976. தெண்டனிட் டெழுந்தபொன் மயிலைச் சீர்பெறக்

     கண்டன னுவகையங் கடற்கு ளாயினன்

     விண்டலத் தினிலிலாப் பதவி வெற்றியைக்

     கொண்டன னெனமனக் குறைவு நீக்கினான்.

3

      (இ-ள்) அவ்விதம் தெண்டனிட் டெழும்பிய அழகிய மயில் போலும் சாயலையுடைய அப்பெண்ணை ஹபீபரசன் சிறப்புப் பொருந்தும் வண்ணம் பார்த்துச் சந்தோஷ சமுத்திரத்தி னுள்ளாகி ஆகாயலோகத்திலும் பூலோகத்திலுமில்லாத பதவியையும்