பக்கம் எண் :

சீறாப்புராணம்

754


முதற்பாகம்
 

பிரதிதினமும் சகித்திருப்பது எவ்வாறென்று மனசின்கண் கவலையானது தங்கியது.

 

2018. சொலத்த காப்பெரும் பகைதொடுத் தினத்தொடுஞ் சூழ்ந்து

     குலத்தி னும்பிரித் தறநெறி தீனிலைக் குரியோ

     ரிலத்தி னும்வரப் பொருந்திலா நமரினா லினியிந்

     நிலத்தி ருப்பது பழுதென மனத்திடை நினைத்தே.

4

      (இ-ள்) அன்றியும், கூறத் தகாத பெரிய பகையைத் தொடுத்து இனத்துடன் வளைந்து குலத்தை விட்டும் வேறுபடுத்தித் தரும வழியை யுடைய தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க நிலைமைக்குச் சொந்தப்பட்டவர்கள் வீட்டின் கண்ணும் வரச் சம்மதப்படாத நம்மவர்களினால் இனி இந்த மக்கமா நகரத்தி லிருப்பது குற்ற மென்று சிந்தையின்கண் கருதி.

 

2019. மறுவி லாதநன் னெறிமறை தேருது மானை

     யறிவி னாய்ந்தகு மதுதனித் தழைத்தரு கிருத்திப்

     பிறவு முற்றதும் வருவது நிகழ்வதும் பேசி

     யுறையு மிப்பதிப் பெரும்பகைக் காவன வுரைத்தார்.

5

      (இ-ள்) குற்றமற்ற நல்ல சன்மார்க்கத்தினது புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தைத் தெளிந் தறியும் உதுமான் றலியல்லாகு அன்கு அவர்களை அஹ்ம தென்னும் திருநாமத்தையுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஏகமாய்க் கூப்பிட்டுப் பக்கத்திலிருக்கும்படி செய்து தங்களின் அறிவினால் ஆராய்ந்து தம்மவருக்கு வந்து சேர்ந்த துன்பங்களையும் மேல் வரப்பட்டவைகளையும் கூறித் தங்கி யிருக்கும் இவ்வூரினது பெரிய பகைக்கு ஆகப்பட்டவைகளையுங் கூறினார்கள்.

 

2020. உற்ற நும்மனத் துடன்பட வுறைபவ ருடனும்

     வெற்றி மன்னசா சிய்யுறை திருநகர் மேவிக்

     குற்ற மின்றியங் குறைவது கருத்தெனக் குறிப்ப

     மற்று வேறுரை யாதுது மானுஞ்சம் மதித்தார்.

6

      (இ-ள்) அன்றியும், பொருந்திய உமது மனதின்கண் சம்மதப்படும் வண்ணம் தங்கியிருப்பவர்களோடும் விஜயத்தையுடைய அரசனான நஜாசிய்யு வசிக்கும் அழகிய நகரமாகிய ஹபஷா ராச்சியத்தை யடைந்து அவ்விடத்தில் யாதொரு குற்றமில்லாமல் தங்கியிருப்பது கருத்தென்று குறித்துச் சொல்ல, அதற்கு வேறு சொல் யாது? ஒன்றுமில்லாததால் உதுமான் றலியல்லாகு அன்கு அவர்களும் சம்மதித்தார்கள்.