முதற்பாகம்
2300.
உள்ளுறக் கிடந்த பல்லறப் பெயர்ந்த
வுதட்டினில் வாயினீ ரொழுக
விள்ளுதற் கரிதா யொருசலாங் குழறி
விளம்பிநின் றனன்முக நோக்கி
வள்ளலும் பிரத்தி யுரைத்திவன் சூமன்
வங்கிசத் துளனொரு வேடத்
தெள்ளருங் குணத்தா லடைந்தன னிவன்கூ
றீதென மனத்திருத் தினரே.
3
(இ-ள்)
அவ்வாறு எதிர்ப்பட்ட அவன் அகத்திற் பொருந்தும்படி கிடக்கப் பெற்ற பற்கள் முழுவதும்
பெயர்ந்த அதரத்தின்கண் வாயினது ஜலமானது சிந்தும் வண்ணம் சொல்லுதற்கரிதாய்க் குழறுதலுற்று
ஒப்பற்ற சலாம் சொல்ல, அவனது வதனத்தை வள்ளலாகிய நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் பார்த்துப் பிரதி சொல்லி இவன் சூமனான இபுலீசு
லகுனத்துல்லாவினது கிளையிலுள்ளவன். ஒரு கோலத்தினது தள்ளுதற் கரிய தன்மையினால் இங்கு வந்து
சேர்ந்தான். இவனது காரணமானது இதுவென்று தங்களின் மனசின்கண் இருக்கும் வண்ணம் செய்தார்கள்.
2301.
ஊன்றிய தடியிற் கிடந்துழன் றொதுங்கி
நின்றவ னுழையினை நோக்கி
வான்றிகழ் புகழார் திருமொழி கொடுத்து
வரவழைத் தொருமருங் கிருத்தி
யீன்றவ ரியாவ ரெவ்வழிக் குளனின்
னிருங்குலப் பெயரியா துனக்குத்
தோன்றிய நாம மேதிவை விடுத்துச்
சொல்லென மீளவு முரைத்தார்.
4
(இ-ள்)
அவ்வித மிருக்கும்படி செய்த வானலோகத்தின் கண்ணும் பிரகாசியா நிற்கும் கீர்த்தியையுடைய
நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பூமியினிடத்து ஊன்றப்
பெற்ற தடியிற் கிடந்து உழலுத லடைந்து ஒதுங்கி நின்றவனான அவனிடத்தைப் பார்த்துத் தங்களின்
தெய்வீகந் தங்கிய வார்த்தையைக் கொடுத்துக் கூப்பிட்டு ஒப்பற்ற பக்கத்தி லுட்காரச் செய்து
உன்னைப் பெற்றவர்கள் யாவர்? நீ எந்த மார்க்கத்தி லுள்ளவன்? உனது பெரிய குடும்பத்தினது
நாமமென்ன? உனக்கு விளங்கிய பெயரியாது? இவைகளை விட்டுக் கூறுவாயாகவென்று திரும்பியுங்
கேட்டார்கள்.
|