பக்கம் எண் :

சீறாப்புராணம்

896


     2414. மணமுர சொலிமறா மதீன மானக

         ருணர்வெழுந் தீனிலைக் குரிய ராருயிர்த்

         துணைவருஞ் சூழ்தர வெழுந்து திண்சுடர்ப்

         பணைதிரட் புயநபி பாத நண்ணினார்.

4

     (இ-ள்) விவாக முரசத்தின் ஓசை  நீங்காத திரு மதீனமா நகரத்தினது அறிவான தோங்கப் பெற்ற தீனுல் இஸ்லாமென்னும் நிலைமைக் குரியோர்கள் தங்கள் சரீரத்தின்கண் நிறைந்த பிராணனுக்கொப்பாகிய நேசர்கள் தங்களைச் சூழும் வண்ண மெழுந்து திண்ணிய பிரகாசத்தையும் பருப்பத்தையுந் திரட்சியையுங் கொண்ட தோள்களையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது பாதத்தி னிடத்து வந்து சேர்ந்தார்கள்.

 

     2415. மல்லணி புயஅபித் தாலிப் மன்னவ

         ரில்லுறைந் திரவினி லிருப்ப வொல்லையின்

        வில்லணி தடக்கையப் பாசும் விண்ணகச்

         செல்லலங் கவிகையா ரிடத்திற் சேர்ந்தனர்.

5

      (இ-ள்) அவ்விதம் வந்து சேர்ந்த அவர்கள் வலிமையைத் தரித்த தோட்களைக் கொண்ட அபீத்தாலிபென்னு மபிதானத்தையுடைய அரசரினது வீட்டில் இரவிற் றங்கியிருக்க, கோதண்டத்தைப் பூண்ட பெரிய கையை யுடைய அப்பாசுறலியல்லாகு அன்கு அவர்களும் விரைவில் ஆகாயத்தின் மண்ணுள்ள அழகிய மேகத்தினது குடையையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

 

     2416. மதிதவழ் கொடிமதிண் மதீன மென்னுமப்

         பதியுறை மன்னவர் பலரும் பண்புற

         விதமொடு நபிசில மொழியி யம்பலுந்

         துதிசெய்தப் பாசுவாய் விண்டு சொல்லுவார்.

6

      (இ-ள்) அவ்வாறு வந்து சேரவே, சந்திரனானது தவழா நிற்குங் கொடிகளினது கோட்டை மதில்களை யுடைய திரு மதீன மென்று கூறும் அந்நகரத்திற் றங்கிய அவ்வரசர்களியாவரும் பண்புறும்படி நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இனிமையுடன் சில வார்த்தைகளைச் சொல்லிய மாத்திரத்தில் அப்பாசு றலியல்லாகு அன்கு அவர்கள் தங்களின் வாயைத் திறந்து புகழ்ந்து கூறுவார்கள்.