பக்கம் எண் :

சீறாப்புராணம்

912


இரண்டாம் பாகம்
 

யாத்திரைப் படலம்

 

கலிநிலைத் துறை

 

2466. மண்ண கம்புகழ் முகம்மது மனங்களித் திருப்பப்

     புண்ணு லாவயிற் கரத்தரும் விடுதியிற் புகுதக்

     கண்ண கன்புவிக் கெவைவிளைந் தனவெனக் கருத்தி

     னெண்ண மோடழிந் தெழுந்திருந் தனனிபு லீசு.

1

      (இ-ள்) இப் பூலோகமும் வான லோகமும் துதிக்கா நிற்கும் நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா ஹபீபுறப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மனமானது சந்தோசிக்கப் பெற்றிருக்க, ஊனுலாவிய வேலாயுதத்தைத் தாங்கிய கையை யுடைவர்களான அந்த மதீனமா நகரத்தார்களும் தாங்கள் தங்குமிடங்களிற் போய்ச் சேர, இபுலீ சென்பவன் இடமகன்ற இப் பூமிக் குண்டானவை யாவை? என்று தனது சிந்தையினது சிந்தனை யோடுங் கெடுதலுற்று எழுந்திருந்தான்.

 

2467. அற்றைப் போதிர வினிலணி மக்கமா நகரி

     னுற்ற நன்னடு மறுகினி லுருத்தெரி யாமன்

     முற்றுங் காத்தளித் திடுமவர் மொழிந்திடு மொழிபோற்

     சுற்று நாற்றிசை யடங்கலுந் தொனிபரந் திடவே.

2

      (இ-ள்) அவ்வா றெழுந்த அவன் அன்றையத் தினத்தி னிரவில் தனது தோற்றத்தை யொருவரும் விளங்காமல் அலங்காரத்தையுடைய திரு மக்கமா நகரத்தின் மத்தியிற் பொருந்திய நல்ல தெருக்களின் யாவையும் காப்பாற்றி அருளா நிற்பவர் கூறும் வசனத்தைப் போல வளைந்த நான்கு திக்கி னிடங்க ளெல்லாவற்றிலும் ஓசையானது பரவும் வண்ணம்.

 

2468. குறைவி லாவள மக்கமா நகர்க்குறை சிகளே

     யுறையு மிந்நகர் முகம்மது மதீனத்துள் ளவரு

     மறையும் வாய்மையின் வலக்கரங் கொடுத்தவ ரவர்க்கே

     முறைமு றைப்படி யொன்றுபட் டொருமொழி முடித்தார்.

3

      (இ-ள்) குற்ற மற்ற செல்வத்தை யுடைய திரு மக்கமா நகரத்தினது குறைஷிகளே! இந்த ஊரின் கண்ணிருக்கும் முகம்மதென்பவனும் திரு மதீனமா நகரத்தின் கண்ணுள்ளவர்களும் துதிக்கா நிற்கும் சத்திய வார்த்தைகளோடு அவரவர்களுக்கு வலக்கை யீந்து ஒன்றாகி வரிசை வரிசையாக ஒப்பற்ற வார்த்தைகளைப் பேசி முடித்தார்கள்.