ஒருபுறம் நபிகள் நாயகத்தின் நற்பண்புகளை, அழகிய முன்மாதிரியை நம் கண்முன் நிறுத்துகிறார்... "காடுமலை செல்லாது, உலகத்தை வெறுக்காது. இல்லறத்தை நல்லறமாய் இயற்றும் வள்ளல், எதிலும் ஒரு மாதிரி, நமக்கோ முன்மாதிரி." நபிகள் நாயகம் அவர்கள் எவ்வாறு ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார் என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறார். குறிப்பாக நபிகள் நாயகத்தை காலம் முழுவதும் எதிர்த்தக் கொடியவர்களை அவர் மன்னித்த பண்பு உலகத்தோருக்கு அழகிய முன்மாதிரி, மன்னித்தேன் ! மன்னித்தேன் ! வள்ளலின் வாய்மூலம் பிரதிகளைப் பெற்றது ! இக்ரிமாவின் மனைவிக்கும் அம்சாவின் ஈரலை சுவைபார்த்த இந்தாவிற்கும் மற்றவர்க்கும் ஆண்டவனின் அருட்கொடையாளர் அண்ணல் நபி மன்னிப்பு தருகிறார்; இன்னொருபுறம் நபிகள் நாயகம் கொணர்ந்த மாற்றங்களை சிறப்பாகச் சொல்கிறார். நகச் சாயத்திற்கு தருகின்ற மரியாதையைக்கூட நங்கைக்குத் தர மறுத்தவர்கள், எவ்வாறு பெண்களை மதிக்கக் கற்றுக்கொண்டனர் என்பதை தெரிவிக்கிறார். வரலாற்றை மட்டும் வடித்துத் தரவில்லை வலம்புரியார். ஆங்காங்கே வாழ்வியல் தத்துவங்களையும், அழகிய வர்ணனைகளையும் நமக்கு அள்ளித் தந்திருக்கிறார்... "படைத்ததற்கெல்லாம் குழந்தை மனிதன் படியாய் விழுந்தான் பாவம் மனிதன்! சிலையைச் செய்தான். சிலையின் காலில் இவனே கிடந்தான். பணத்தை வடித்தான். அவனுக்கே அது வினையாய் விடிந்தது. மனிதன் தனக்குத்தானே அடிமையானான்" என்பதை எவ்வளவு எளிமையாக விளக்குகிறார் வலம்புரியார் ! "மலைகள் பூமியின் படைப்புகள்." "பள்ளத்தாக்குகளின் எதிர்ப்பதம்", "குன்றுகள் கொப்புளங்கள்", "காடுகள் கூந்தல் முடிச்சுகள்." ஆறுகள் "வியர்வைக் கோடுகள்", ஏரிகள் "கவிழ்ந்து கிடக்கும் காக்கைப் பொன்கள்." இவை போன்ற பல உருவகங்கள், உவமைகள் நூல் முழுதும் பரவிக் கிடக்கின்றன. வரலாற்றுக்காக ஒரு முறை, கவிதை அழகை ரசிக்க மற்றொருமுறை, தெளிவான சிந்தனை பெற இன்னொரு முறை எனப் பலமுறை படித்திடவேண்டிய நூல் இது. |