புதையல் கிடைத்தது இயல்-25 கதிரவ னொளியால் கானலின் அலைகள் கடலெனப் பாலையில் பறந்து மதியம்[ம்]மி லிருந்து ‘மிசு’ருக்குச் செல்லும் வணிகரைத் தீயெனத் தாக்கப் பொதியினைச் சுமந்த ஒட்டகை விரட்டிப் புகுந்தனர் அடவியில், அங்கே எதிரினில் கிணறு இருக்கவே கண்டு இறைவனின் கருணையை வியந்தார். காய்ந்திடும் வெயிலால் உலர்ந்ததம் நாவால் கடவுளைத் துதித்தொரு வணிகன் ஓய்ந்தொரு புறத்தில் கிணற்றுநீர் கொணர ஒருவனை ஏவினன் அவனோ பாய்ந்துடன் சென்று நீண்டதோர் கயிற்றில் பாத்திரம் பிணைத்துஅக் கிணற்றில் பாய்ச்சியே இழுக்கப் பாத்திரம் அழுந்தப் பாரமாய் இருப்பதை உணர்ந்தான். தாகமே வருத்தத் தவித்திடும் வணிகர் தலைவனோ ‘மாலிக்’கு என்போன் வேகமாய் இரைந்து "தண்ணீரைக் கொண்டே விரைவினில் ஓடிவா" என்றே. சோகமாய்க் கதற, முழுப்பலத் தோடு தூக்கினான் வேலையாள் தண்ணீர் ஏகமாய்க் கனத்தே எழுந்தபாத் திரத்தில் இணையிலாப் பேரொளி கண்டான். |