பக்கம் எண் :

109


"மன்னுயிர் யாவும் இறைவனின் பொறுப்பில்

     வாழ்வதை மறந்திடீர்! இங்கே

என்னுயிர் காக்க இறைவனே உம்மை

     ஏவினன்!" என்றனன் இளைஞன்.

 

"கண்ணீரை வடிக்கச் செய்திடும் ஒளியால்

     கதிரவன் தாக்கிடும் போதில்

தண்ணீரைத் தேடிக் கிணற்றையே கண்டு

     தாகமே தணித்திட யாங்கள்

எண்ணியே வந்தோம், இல்லையே லுன்னை

     இங்குவந் திறைவனா மீட்பான்?"

என்றனன் ஒருவன் இம்மொழி கேட்டே

     இதயமே கலங்கினான் இளைஞன்.

 

"கதிரவ னொளியும் கானல்வெந் தழலும்

     காட்டுவ தாரென நினைத்தீர்?

மதியினைத் தூண்டித் தண்ணீருக் கிங்கு

     வந்திடச் செய்ததும் யாரோ?

எதிரினில் கிணறு இருப்பதைக் காட்டும்

     இருவிழி படைத்தவ ரெவரோ?

மதியினைக் கெடுத்தே இறைசெயல் மறுத்து

     மாய்ந்திடீர்!’! என்றனன் இளைஞன்.

 

"இறையருள் மறவா இளைஞனே உன்னை

     இவ்விதம் வருத்திய தெவனோ?

நிறைமதி யுடைய உன்னையே அடைய

     நெடுந்தவம் புரிந்தவர் எவரோ?

மறைத்திடல் வேண்டாம் கூறுவாய்!" என்று

     மாலிக்கு கேட்கவே இளைஞன்

"உரைத்திடில் மீண்டும் பெருந்துயர் விளையும்

     ஒன்றையும் சொல்லிடேன்!" என்றான்.