பக்கம் எண் :

129


காதலுக்கு விலங்கா?

இயல்-28

 

ஆடுவதும் ஓடுவதும் அங்குமிங்கு மாக

ஆர்ப்பரித் துலாவுவதும் அழுதபடி நின்று

வாடுவதும் காதலனைத் தேடுவது மாக

வாய்திறந்து கலகலெனப் பேயெனச் சிரித்துப்

பாடுவதும் பாங்கியரைச் சாடுவது மாகப்

பண்பிழந்த பேரழகி முல்லைமலர் கொய்து

சூடுவதும் தூக்கிஎறிந் தோடுவது மாகச்

சுலைகாவின் செயல்முழுதும் குலைந்திடவே ஆச்சு.

 

ஆற்றல்மிகும் கவியரசும், புவியரசர்: தைமூஸ்,

அமைச்சருடன் பிணியகற்றும் மருத்துவரும் சூழப்

போற்றுமெழில் புதல்விநிலை மாற்றிடவே வந்தார்.

‘பொலபொல’ன விழிகள் நீரைப் பொழிந்திடவேநின்றார்.

தேற்றுதற்கு வந்தவர்கள் சாற்றுதற்கு அஞ்சித்

திரும்பிடவே நினைத்துருகிப் பெருந்துயரம் கொண்டார்

வீற்றிருந்த சுலைகாகொடுஞ் சீற்றமுற்ற போது

வேற்றுவராய்த் தோற்றிடவே தூற்றிடத் துணிந்தாள்!

 

"மண்ணுலகைப் பொன்னுலகாய் மாற்றும் பெண்குலத்தை

வஞ்சகமாய் வாட்டுகின்ற ஆண்குலம் பிறந்தோய்!

பெண்ணுலவும் கன்னிமாடம் என்னசெய்ய வந்தீர்?

பிளந்திடுவே னுங்களகம் போய்விடுவீர்; இங்கு

முன்பொருவன் வந்தெனக்கே அன்பிலாவ லூட்டி

மோசம்செய்து என்றன்வாழ்வை நாசமாக்கி விட்டான்.

இன்னுமுங்கள் கண்வலையில் சிக்கிடுவே னென்றோ

இங்குவந்தீர்!" எனச்சுலைகா துயர்பொங்கக் கேட்டாள்.