பக்கம் எண் :

135


சுலைகாவின் பிரார்த்தனை

இயல்-29

 

தவமேவிய அடியார்க்கருள் தவறாதருள் புரிவாய்

பவமேதென அறியார்துயர் பறந்தோடிட அருள்வாய்

தவறேசெயத் துணியாஎனைத் தனியாக்குதல் முறையோ

எவரேயுனை யல்லாதெனக் கேற்றதுணை இறையே!

அயலாரகம் துயில்வாரிடம் அன்பேசெயப் படைத்தால்

துயராலகம் அயராவரம் சுரக்காதது முறையோ ?

பயமேபடைத் தடியார் முகம் பார்க்காதது சரியோ ?

நயமேதரும் கருணாஒளி நயனமுடை இறையே !

சிறையேதரும் உலகோரிடம் சிரமேகுனிந் திடவோ?

குறையேமிகும் கொடியோரிடம் குறையே உரைத்திடவோ

மறையேதரும் இறைவாபுவி மறைந்தாயிதற் கெனவோ ?

நிறைவாகிய நிதியே குறை நிலைக்காதருள் இறையே !

அழியாப்பழி யடைந்தே அதை அடுத்தோரறிந் திடவே

மொழியாலுரைத் திடவேஎதும்முடியாநிலையடைந்தேன்

விழியாலெழும் துயரேசுடும் வெந்நீரெனச் சிந்த

ஒழியாத்துயில் புரிவாயெனில் பழிசேர்ந்திடும் இறையே!

பிறவாவரம் அளித்தாயிலை. பிழையாய்ப் பிறந்தாலும்

இறவாவரம் தந்தாயிலை; எண்ணாததை எண்ணி

மறவாவரம் அளித்தே, எனை மதியார்தமை மதித்தே

உறவாடிட உரையாடிட உணர்வூட்டிய இறையே!