பெண்மைக்கு விலைவைப்போர், பெருமைக்குப்
பொருளீவோர், பேறாய்க் கிட்டும்
அன்புக்கு விலைகேட்போர், அறிவுக்கு
விலைவைப்போர், அடைதற் கொண்ணாப்
பண்புக்கு விலைசொல்வோர் மிகுந்துள்ள
உலகத்தில் பணமே ஈந்து
தொண்டுக்கு அடிமைபெறும் மிசுரின்பெருஞ்
சந்தையிலே சூழ்ந்தார் பல்லோர்!
பெற்றெடுத்த மதலையரை வளர்ப்பதற்குக்
கிழத்தாதி பெறவந் தோரும்
கற்பழியாக் கன்னியரை அடிமைபெற
வந்தவரும், காட்டும் வேலை
அற்புதமாய்ச் செய்சிறுவர் அடைவதற்கு
வந்தவரும், அரைநொ டிக்குள்
நற்பதமாய் நல்லுணவு சமைப்பவரை
வாங்கிடவும் நின்றார் பல்லோர்!
வறுமையினால் தம்மகளை விலைகூறும்
தந்தையரும், வாழ்வி ழந்த
சிறுமையினால் தனைத்தானே விற்கின்ற
விதவையரும், செல்வ மைந்தர்
பெருமைபெறும் கல்விபெறத் தனைவிற்குந்
தாய்மாரும், பெற்றோர் துன்ப
வறுமையினைத் துடைத்திடவே அடிமைப்பட
வந்தவரும் வணங்கி நின்றார்.