பன்னெடுநாள் தம்கனவு பலித்திட்ட பெருமகிழ்வால் பலமே பெற்றுப் புன்னகைத்து "உம்முடைய ஊரென்ன, பெயரென்ன புகல்வீர்!" என்றாள். "கன்னானில் பிறந்தயெனை விலைகொடுத்து வாங்கிவிட்ட கார ணத்தால் இந்நாளி லிருந்தென்றன் பெயரடிமை ஆகு"மென இளவல் கூற, "முன்னாளில் பெற்றவர்கள் உமக்களித்த பெயரென்ன மொழிவீர்!" என்றாள். "அந்நாளில் தாய்தந்தை யூசுபெனப் பெயரிட்டு அழைத்தார்!" என்றார். பெற்றளித்த கன்னானைப் பெயரளித்த பெற்றோரைப் பெரிதும் போற்றிப் பற்றுயர்ந்த உணர்ச்சியினால் ‘யூசுப்’எனப் பன்முறைகள் தனக்குள் கூறிச் சுற்றிநின்ற தோழியரை யூசுபுக்கு வேண்டும்பணி செய்யச் சொல்லி நற்றவத்தின் பெரும்பயனைத் தனக்களித்த நல்லிறையைத் துதிக்க லானாள்! - - x - - |