விருந்தும் வியப்பும் இயல்-39 நன்மையெனில் ஒன்றிரண்டு நாட்கள்வரை பேசி நாவடைத்துத் தம்வழியை நாடுகின்ற மாந்தர் புன்மையெனில் பன்முறையும் காலம்பல பேசிப் பொய்களையும் மெய்ப்படுத்தும் ‘புண்ணியமே’ செய்வர்! உண்மையினில் ஒன்றைப்பத்து நூறாய்ஆக்கு வித்து ஊரறியச் செய்வதிலே ஊக்கம்காட்டு கின்ற பெண்களிடை அதிவிரைவில் யூசுப்-சுலை காவின் பேச்செழுந்து காற்றெனவே பரவியது எங்கும். பிறருடைய சிறுமைகளைப் பெரிதுசெய்து என்றும் பேசுவதிற் பெருமைபெறும் புல்லர்களின் நாவின் திறமுடைய கற்பனையில் யூசுப்-சுலை காவின் செயல்கள்பல வடிவினிலே உருவெடுத்துக் காம நிறமடைந்து அங்குமிங்கும் நிலவுவதைக் கேட்டு நிலைகுலைந்து அமைச்சருளம் குன்றியது வெட்கி துறவடைந்த மனநிலையில் தனிமையினில் சுலைகா துயரடைந்து மனமுடைந்து சோர்வடைந்து போனாள். ஊர்வாய் உளறுகிறது : "ஆண்மையற்ற அமைச்சரையே மணந்ததனால்சுலைகா அடிமையிடம் அன்புசெய்தாள்!" என்றுசிலர் கூற "மேன்மையுற்ற குலமெனினும், அழகின்போதை தந்த வேட்கையினால் அறிவிழந்தாள்!" என்றுசிலர் கூறக் "காண்பவரை யாரென்று ஆய்ந்தறிந் திடாமல் காதலென்று காமமுற்றாள்!" என்றுசிலர் கூற "ஈனமிதைப் போலிலையே எப்படிவாழ் கின்றாள்?" என்றுசிலர் இழிவுரைத்து எங்கும் பேசலானார |