பக்கம் எண் :

217


அஜீஸின் மரணம்

இயல்-42

தன்னடிமை யூசுபிடம் சுலைகா கொண்ட

    தவறான நட்பதனைத் தன்னைப் போன்றே

மன்னவரும் தளபதியும் மற்று முள்ள

    மந்திரியும் சேவகரும் அறிந்த தாலே

தன்னுடைய கண்ணியமும் தகுதி யாவும்

    சரிந்ததனால் அமைச்சரஜீஸ் மனமு டைந்து

தன்கடமை மறந்தவராய்த் துறவி போன்று

    தனிமையினில் செயலிழந்து சவமாய் வாழ்ந்தார்.

 

தம்முடைய தலையினிலே பெருஞ்சு மையைத்

    தாங்குகின்ற உடல்வலிமை படைத்த மாந்தர்

தம்முடைய நெஞ்சழுத்தும் சிறுசு மையே

    தாங்குதற்கும் இயலாமல் தலைக விழ்ப்பார் !

இம்முறையில் அமைச்சரஜீஸ் இதயத் துள்ளே

    எழிலரசி சுலைகாவே சுமையாய் விட்டாள்.

எம்முறையில் ஆய்ந்தாலும் சிறிதும் மாற்ற

    இயலாமல் படுக்கையிலே சாய்ந்து விட்டார் !

 

தனியொருவர் தவறிழைப்பின், அவர் குலத்தை -

    சந்ததியை, சார்ந்தவரை, சமுதா யத்தின்

தனிப்பெருமை அனைத்தையுமே தகர்ப்ப தேபோல்

    தன்மனைவி சுலைகாவின் தவறி னாலே

தன்னருமை பெருமையெலாம் மக்கள் முன்னால்

    தகர்ந்துவிட்ட பெருங்கொடுமை எண்ணி எண்ணிப்

புண்ணடைந்த அமைச்சரஜீஸ் உள்ளத் துள்ளே

    புரையோடும் அவமானம் சொல்லப் போமோ ?