பக்கம் எண் :

35


யூசுப் பரம்பரை

 

நமக்காக அல்லாமல் நம்மை யல்லார்     

நலம்நோக்கி வாழ்கின்ற உணர்ச்சி யூட்டி

தமக்காகத் தாம்பெற்ற செல்வர்க் காகத்    

தயங்காமல் இறையோனின் ஆணை ஏற்றே

‘எமக்காக எதுவுமிலை; எதைக்கேட் டாலும்   

இக்கணமே தந்திடு வோம்’எனும் நினைவை

நமக்கீயும் நல்வாழ்வை நடாத்தி நின்ற      

நபிஇபுறா ஹீம்தவத்தில் இஸ்ஹாக் வந்தார்.  

 

எவ்வுயிரும் இறைபணிக்கே உரிய தென்ற     

இபுறாஹீம் நபிகுலத்தில் மலர்ந்த இஸ்ஹாக்

செவ்வையுடன் குலம்தழைக்க நெறிநிலைக்கச்

செழித்தோங்கிக் கட்டிளமைப் பருவம் பெற்று

இவ்வுலக வாழ்வினுக்கே முதன்மை யான    

இல்லறத்தை ஏற்றதிலே இன்பம் துய்த்து    

ஒவ்வியமெய் யன்புநிறை வாழ்க்கை வானில்  

ஒளிமிகுந்த தாரகையே உதிக்கக் கண்டார்!

 

வளமிகுந்த இபுறாஹீம் நபியின் பூங்கா       

வனப்பொருளிரும் பலமலரைப் பூக்கச் செய்தே

உளம்மகிழக் குலம்வளர உலகு முற்றும்     

ஒப்பற்ற நறுமணத்தைப் பரவச் செய்யும்

வளமுடை பொன்மலராய்ப் பெற்றெ டுத்த    

மைந்தனுக்கு யாக்கூ[ப்]பெனப் பெயருமிட்டே  

அளவற்ற மகிழ்வுற்ற இஸ்ஹாக், நெஞ்ச      

அருவிதனில் ஆரமுதம் சுரக்க வாழ்ந்தார்.