யூசுபின் பிறப்பு இயல்-2 கணவன் களிப்பைப் பெரிதென்னும் கடமை வாழ்வைத் தொடங்கிட்ட குணவதி ராஹிலா திருமுகத்தில் கூடித் திரளும் புத்தொளியை மனத்தால் உணர்ந்து மகிழ்வுற்று மனைவியின் நெஞ்சைக் கூர்விழியால் கணத்தில் நோக்கிய யாக்கூபின் கருத்தை உணர்ந்தாள் இல்லரசி! வெட்கிக் கவிழ்த்த தன்முகத்தை விரைந்து நிமிர்த்திய யாக்கூபை ஒட்டி மார்பினில் முகம்புதைத்தே உலகை மறக்கும் ராஹிலாவைக் கட்டித் தழுவித் தம்மகிழ்வைக் காட்டிய யாக்கூப் காதருகில் வெட்கம் விலக்கி, "ஒருகுழந்தை விரைவில் வருவாய்!’ எனக்கேட்டார் "ஐந்து திங்கள் ஆவதற்குள் அவசரம் செய்தால் முடிந்திடுமோ? ஐந்து திங்கள் பொறுத்திடுவீர்! அழகுச் செல்வனைப் பெற்றிடுவீர்! மைந்தனைக் கண்டதும் மனைவியினை மறந்திட மாட்டீர் என்பதற்கே எந்தனுக் குறுதியே கூறிடுவீர்!’ என்றே வேண்டினள் ராஹிலாவே! |