பக்கம் எண் :

40


யாக்கூபும் ராஹிலாவும்

இயல்-3

 

தாய்மையினை அடைந்திட்ட காரணத்தால்    

     தளர்வுற்ற உடலினிலே புதுமை இன்பம்

தோய்ந்திடவே யூசுபினைப் பெற்றெ டுத்த    

     துயர்மறந்து முகம்மலர்ந்த ராஹி லாவை

வாய்மைநிறை நபியாக்கூப் உற்றுநோக்கி     

     மைந்தனையே தந்ததற்கு நன்றி சொல்லிச்

  சேய்முகத்தில் ஒளிமுத்தம் பதித்தே அன்புத்     

      தேவியரின் திருமுகத்தை நோக்க லானார்!

 

  ‘உங்களையே வார்த்தெடுத்த வடிவம்’ என்றாள்,   

           ‘உன்னழகும் கொண்ட உயிர்ச் சிற்ப’ மென்றார்!

‘திங்கள்ஒளி தங்கும்எழிற் செல்வ’ மென்றாள்,  

      ‘தேய்ந்தழியும் திங்களிதற் கீடோ?’ என்றார் 

‘அங்கமெலாம் நமதன்பின் சின்னம்’ என்றாள்!   

     ‘அதனுயிரோ தெய்வீகச் சக்தி’ என்றார்!

‘துங்கமணிச் சர’ மென்றாள்; ‘ஆமாம்’ என்றார்,   

         சொல்லாடல் கேட்டமகன் சிரிக்கக் கண்டாள்!

 

"எதற்காகச் சிரிக்கின்றாய் மகனே?" என்றாள்,      

      "இல்லாமல் அழச்சொல்கின் றாயா?’ என்றார்!

"இதற்குள்ளே மகன்பக்கம் சேர்ந்து விட்டால்       

     இனிஎனக்கு ஆதரவு யாரோ?’ என்றாள்!   

 "அதற்குனது மகன்வந்து விட்டான்!" என்றார்!        

        "அவனெதற்கு நீங்களே வேண்டும்!"   என்றாள்

இதைக்கேட்ட யூசுபு வெம்பக் கண்டே           

        இருகரத்தால் மார்பணைத்தாள் ராஹி லாவே!