பக்கம் எண் :

54


விதி செய்த வேலை

இயல்-9

 

மதியின் பலத்தால் சதிசெய்து

மாநபி யாக்கூப் தம்மகனைப்

பதியில் தன்னுடை அடிமையெனப்

பறித்து வந்து ஈராண்டாய்

நிதியென யூசுபைக் காக்குங்கால்

நெஞ்சில் உண்மையை நினைப்பூட்டி

விதியோ சிரித்துத் தன்னுடைய

வேலையை மெள்ளத் துவக்கியதே.

 

உள்ளச் சுமையால் உடல்நொந்தே

உயிரைப் பறிக்கும் கொடும்விதியைத்

தள்ளி வெல்லும் வலுவின்றிச்

சகோதரர் யாக்கூப் தம்மிடத்தில்

சொல்லி அனுப்பினாள், அந்நேரம்

தொடர்ந்த விதிதன் பெருங்கரத்தால்

அள்ளிச் சென்றதே அவளுயிரை

அழுது புலம்பினார் யூசுபே.

 

பதறி வந்த யாக்கூபைப்

பார்த்ததும் உள்ளம் வெடித்திடவே

கதறிக் கண்ணீர் வடிக்கின்ற

கண்மணி யூசுப் தனையழைத்தே

"எதற்குத் துயரம் என்மகனே!

எல்லாம் இறைவன் விதிப்பயனே!

இதற்குப் பணியா மதிஎதுவும்

இல்லை" என்றார் நபி யாக்கூப்!