அன்பு விளைத்த பகை இயல்-10 இறையைப் பணியும் நேரத்தே எண்ணம் பார்வை செய்கையினை ஒருமைப் படுத்தும் முறைபோலே உணர்வும் உயிரும் தன்னுடைய அருமைப் புதல்வர் யூசுபிடம் அடிமைப் படுத்தி அவரிடமே பெருமை காணும் யாக்கூபின் பேச்சும் மூச்சும் யூசுபே! பன்னிரு மைந்தரி லொருமகவாய்ப் பாரினில் பெற்ற யூசுபைத் தன்னிரு விழிகளின் பேரொளியாய்த் தனியொரு மகனாய் யாக்கூபு எண்ணிக் காக்கும் நிலைகண்டே ஏனைய மைந்தர் நெஞ்சினிலே சின்னஞ் சிறுவன் யூசுபிடம் சீற்றம் எழும்பச் செய்ததுவே பெற்ற புதல்வர் அனைவரிலும் பேதம் ஏதும் கொள்ளாமல் சற்றும் வேற்றுமை இல்லாமல் சமமாய் நடத்தும் பெரும்கடமை முற்றும் தவிர்த்தார் தந்தையென மூத்தவ ரெல்லாம் கருதிடவே பற்றிப் படர்ந்த பொறாமைப் பேய் பார்வையில் யூசுப் பட்டனரே. சிந்தையில் களங்கம் அறியாத சிறுவன் யூசுப் தன்னிடத்தே தந்தையர் காட்டும் தனியன்பால் சகோதரப் பகைமை சூழ்வதனை எந்தஓ ரளவும் அறியாமல் எவ்விதத் துயரும் கொள்ளாமல் சந்ததம் தந்தை அருகினிலே தங்கி மகிழ்ந்து வாழ்கின்றார். |