பக்கம் எண் :

58


எழிலைக் கண்டான்

இயல்-12

 

நீரருவிச் சாரல்விழும் நெடியபசுஞ்

     சோலையிலே நெஞ்சி னிக்கும்

பேரமுதச் சுவையூட்டும் இன்னிசையைத்

     தோழியர்கள் பெய்து நிற்கச்

சீரழகைக் காட்டுகின்ற யாழிலிசை

     மீட்டுகின்ற சுலைகா என்னும்

பேரழகுச் செல்வத்தைப்   பெண்வடிவில்

     கண்டவனே பிரம்மிப் புற்றான்.

 

நடைகாட்டி, நகைகாட்டி, நல்லுணர்வு

     முகம்காட்டி நாணம் காட்டிப்

படைகூட்டிப் பகையோட்டும் பார்வேந்தன்

     தைமூஸின் பண்பு காட்டிக்

கொடைகாட்டிக் குணம்காட்டி மடமயிலாய்ச்

     சேடியர்கள் குலுங்கி யாட

இடையொடிய நடனமிட இசைபாடும்

     சுலைகாவின் எழிலைக் கண்டான்.

 

பிறைநுதலில் மின்னுகின்ற அறிவொளியைக்

     கூறுவதோ? பெருமைக் கேற்ற

நிறைமதியின் திருமுகத்தில் நிலவுகின்ற

     பெருமிதத்தை நிகழ்த்தப் போமோ?

அருகழைக்கும் கருவிழியின் இதழ்நடத்தும்

     சிறுநகையின் அழகைக் கண்டோர்

உருகவைக்கும் பேரெழிலே சுலைகாவாய்

     உருவெடுத்தே உதித்த தென்பார்!