பக்கம் எண் :

60


கிழவியின் கண்டிப்பு

  இயல்-13  

 

மின்னுகின்ற பாவையினைச் சூழ்ந்திருக்கும்

     கருவிழியாய் மேனி நல்லாள்

பெண்ணரசி சுலைகாவைச் சூழ்ந்துவரும்

     தோழியர்கள் பெருமை யோடு

பண்ணிசைக்கச் சுலைகாவும் புன்னகைக்கப்

     பெண்வீரர் பாது காக்கக்

கன்னியர்கள் தங்குகின்ற காவல்மிகும்

     மாளிகையில் கடிதில் சேர்ந்தார்.

 

இளவரசி சுலைகாவை இருக்கவைத்தே

     உடைமாற்றி இனிமைமிக்கப்

பலஉணவு பரிமாறும் கிழத்தாதி

     தோழியரைப் பார்த்துச் சொல்வாள்

"நிலவுபொழி கின்றதெனில் பூங்காவில்

     நெடுநேரம் நிற்க லாமோ?

அளவுண்டே அனைத்திற்கும்" எனக்கூறித்

     துயில்வதற்கு அனுப்பி வைத்தாள்.

- - x - -