பக்கம் எண் :

68


யூசுபின் கனவு

இயல்-16

 

தூங்கு கின்ற யூசுபின்

     சுடர்மு கத்தில் புன்னகை

தேங்கி நிற்கக் கண்டதும்

     தந்தை யாக்கூப் சிந்தையில்

ஓங்கி நின்ற இன்பமே

     ஒருக ணத்தில் வீழ்ந்திடத்

தூங்கி மீண்ட யூசுபு

     துரித மாகக் கூறினார்.

 

"எந்தை யேஇது வரைக்கும்

     என்றும் காணாப் புதுமையாய்

விந்தை யான கனவுகண்டே

     விழித்தெ ழுந்தேன்!" என்றனர்.

அந்தச் செய்தி கேட்டதும்

     அதிர்ச்சி யுற்ற யாக்கூபு

சிந்தையில் கலக்க மின்றித்

     தெளிவாய்ச் சொல்லக் கூறினார்.

 

"வானம் பூமி ஆழியும்

     வனப்பு கொண்டி லங்கிடக்

காணும் என்றன் தோளினில்

     கதிரோன் வந்தே அமர்ந்தனன்.

வானு லாவும் மதியமும்

     வலிய வந்தென் மடியினில்

தானும் தங்கிக்கொள் வதற்குச்

           சம்மதத்தைக் கேட்டது."